தொழில்துறை உற்பத்தி சரிவு: சில்லரை பணவீக்கம் 7.59 சதவீதமாக உயர்வு

தொழில்துறை உற்பத்தி சரிவு: சில்லரை பணவீக்கம் 7.59 சதவீதமாக உயர்வு
Updated on
1 min read

நாட்டின் தொழில்துறை உற்பத்தி டிசம்பர் மாதத்தில் 0.3 சதவீதமாக சரிந்துள்ளது. அதேசமயம் ஜனவரி மாத சில்லரை பணவீக்கம் 7.59 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த இரண்டு காரணிகளும் புதிய நெருக்குதலை ஏற்படுத்தியுள்ளன.

பொருளாதாரம் மேம்படுவதற்கான அறிகுறிகள் தெரிவதாக மக்களவையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்த மறுநாளே உற்பத்தி சரிவு மற்றும் பணவீக்க உயர்வு என்ற இரண்டு விஷயங்கள் புதிய நெருக்குதலை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளன.

நவம்பர் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி 1.8 சதவீதமாக உயர்ந்தது. இதனால் மீட்சிப் பாதைக்கு திரும்புவதாக நம்பப்பட்டது. இந்நிலையில் டிசம்பரில் மீண்டும் சரிவை நோக்கி திரும்பியுள்ளது கவலை அளிப்பதாக அமைந்துள்ளது.

ரிசர்வ் வங்கியும் கடந்த நிதிக் கொள்கையில் வட்டி விகிதத்தில் எவ்வித மாறுதலையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் பணவீக்கம் கட்டுக்குள் இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் சில்லரை பணவீக்கம் 7.59 சதவீதமாக உயர்ந்துள்ளது.

முதன்மை சரக்குகள் விலை 18 சதவீதமாக உயர்ந்துள்ளது. நவம்பர் மாதத்தில் இது 8.6 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துக்கு முன்பு மூன்று மாதங்கள் தொழில்துறை உற்பத்தி சரிவை சந்தித்தது. நவம்பரில் ஓரளவு ஏற்றம் பெற்ற நிலையில் டிசம்பரில் சரிவை சந்தித்துள்ளது.

பிரதான துறைகள் 1.3 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளன.

சில்லரை பணவீக்கத்தைப் பொருத்தமட்டில் காய்கறிகள் விலை உயர்வு குறியீட்டெண் (சிபிஐ) அதிகரிப்புக்குக் காரணமாக அமைந்துள்ளது.

ரிசர்வ் வங்கி கடந்த நிதிக்கொள்கையில் பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்காக ரெப்போ விகிதத்தை ஓராண்டிலிருந்து 3 ஆண்டுகள் வரை நீட்டித்தது. இதனால் வங்கிகளிடம் கடன் அளிப்பதற்கு தேவையான பணப் புழக்கம் இருக்கும் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் பொருள் விலையேற்றம் காரணமாக சில்லரை பணவீக்கம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் மாதம் 7.35 சதவீதமாக இருந்த சில்லரை பணவீக்கம் தற்போது 7.59 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியில் இது 1.97 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் உணவுப் பணவீக்கம் 13.63 சதவீதமாக இருந்தது. டிசம்பரில் 14.19 சதவீதமாக இருந்தது சற்று குறைந்து காணப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in