

தேவைகளைப் பொறுத்து மேலும் சில பொதுத் துறை வங்கிகளை மத்திய அரசு இணைக்கும் என்றுநிதித் துறை இணை அமைச்சர் அனுராக் தாகுர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு 10 பொதுத் துறை வங்கிகளை இணைத்து 4 வங்கிகளாக மாற்றுவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், யுனைட்டட் பேங்க் ஆஃப் இந்தியா இணைக்கப்பட உள்ளது. அதேபோல், இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கியும், கனரா வங்கியுடன் சிண்டிகேட் வங்கியும் இணைக்கப்பட உள்ளன. யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா உடன் ஆந்திரா வங்கி,கார்பொரேஷன் வங்கி இணைக்கப்பட உள்ளன. வரும் ஏப்ரல் முதல் இந்த இணைப்பு நடைமுறைக்கு வர உள்ளது.
இதுகுறித்து தாகுர் கூறும்போது, ‘நாங்கள் வங்கி இணைப்பு நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளோம். தேவை இருக்கும் பட்சத்தில் மேலும் சில வங்கிகள் இணைக்கப்படும்’ என்று தெரிவித்தார்.