வருமான வரி செலுத்துபவர்களில் 80% பேர் புதிய திட்டத்துக்கு மாறி விடுவார்கள்: நிதியமைச்சகம் நம்பிக்கை

வருமான வரி செலுத்துபவர்களில் 80% பேர் புதிய திட்டத்துக்கு மாறி விடுவார்கள்: நிதியமைச்சகம் நம்பிக்கை
Updated on
1 min read

வரும் நிதியாண்டில் வருமான வரி செலுத்துபவர்களில் 80 சதவீதம் பேர் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய வருமான வரி திட்டத்திற்கு மாறி விடுவார்கள் என நிதியமைச்சகம் கணித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் வரும் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் வருமான வரி கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி தற்போது வருமான வரி கணிக்கிடும் முறையிலும் சில மாற்றங்கள் செய்து புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய திட்டத்தின் கீழ் 5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வருமான வரி இல்லை. புதிய திட்டத்தின்படி 5 லட்சம் ரூபாய் வரை வருமான வரி கிடையாது என்ற சலுகை பெறுவதால் 80 சிசி உட்பட எந்த ஒரு வரி விலக்குப் பிரிவும் கணக்கில் கொள்ளப்படாது.

80 சி மற்றும் 80டி பிரிவுகளின் கீழ் தற்போது எல்டிசி, வீட்டு வாடகை, பொழுதுபோக்கு அலவன்ஸ், புரபஷனல் வரி, குடியிருக்கும் வீடு மற்றும் காலி இடங்களுக்கான வீட்டுக் கடன் வட்டி போன்றவற்றைச் செலுத்தும் தொகைகளுக்கு இனிமேல் வருமான வரிச் சலுகை பெற முடியாது.
அதேசமயம் வரும் நிதியாண்டிலும் ஒருவர் முந்தைய வருமான வரித் திட்டத்தின்படி கணக்குத் தாக்கல் செய்ய இயலும். அவ்வாறு செய்தால் 2.5 லட்சம் ரூபாய் வரையில் மட்டுமே வருமான வரி விலக்கு உண்டு.

இந்தநிலையில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வருமான வரி புதிய திட்டம் குறித்து வருவாய்த்துறைச் செயலாளர் அஜய் பூஷண் பாண்டே கூறியதாவது:

‘‘இந்தியாவில் வருமான வரி செலுத்துபவர்களின் பொருளாதார சூழல் மற்றும் தேவையை கருத்தில் கொண்டு பட்ஜெட்டில் 2 விதமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. வரும் நிதியாண்டில் வருமான வரி செலுத்துபவர்களில் 80 சதவீதம் பேர் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய வருமான வரி திட்டத்திற்கு மாறி விடுவார்கள் என நிதியமைச்சகம் எதிர்பார்க்கிறது. அவ்வாறு நடந்தால் வருமான வரி செலுத்தும் நடைமுறை வெகு எளிமையாக மாறும்.’’ எனக் கூறினார்.

தவறவிடாதீர்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in