

இந்தியாவின் உற்பத்தித் துறை செயல்பாடு கடந்த ஜனவரி மாதம் அதிகரித்துள்ளது. கையிருப்பில் உள்ள ஆர்டர்கள் அதிகரிப்பால் கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு செயல்பாடு அதிகரித்துள்ளதாகத் தனியார் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
விற்பனை அதிகரிப்பு காரணமாக தொழிற்சாலைகளில் புதியவர்களைப் பணிக்கு அமர்த்தும் போக்கு அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.
நிகிகி உற்பத்தி கொள்முதல் நிர்வாக குறியீடு கடந்த மாதத்தில் 55.3 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டு டிசம்பரில் 52.7 புள்ளிகளாக இருந்தது. விற்பனை அதிகரிப்பு காரணமாக உற்பத்தி அதிகரித்துள்ளன. ஜனவரிமாதத்தில் தேவை அதிகரித்துள்ளதால் புதிய பணிகளுக்கான ஆர்டர்கள் அதிகரித்துள்ளன. மேலும் நிறுவனங்களின் உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் உள்ளீடு பொருள்வாங்கும் அளவு மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்கம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் இதுவரை நிலவி வந்த தேக்கநிலை மாறி தேவை அதிகரித்துள்ளது. இதனால் உற்பத்தியும் அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
நிறுவனங்களுக்கு கிடைத்துள்ள புதிய ஆர்டர்கள், தேவைஅதிகரித்துள்ளதை உணர்த்துகிறது. ஏற்றுமதிக்கான ஆர்டரும் நவம்பர் 2018 காலத்தை விட அதிகம் உள்ளதாக நிறுவனங்கள்தெரிவிக்கின்றன. அதிக எண்ணிக்கையிலானோர் பணிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகடந்த ஏழரை ஆண்டுகளில் இல்லாத அளவை விட அதிகமாகும்.
பொருட்களின் உள்ளீடு விலை மற்றும் விற்பனை விலை கணிசமாக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த பணவீக்க அளவு 7.35 சதவீதமாக கடந்த டிசம்பரில் இருந்துள்ளது. இது ரிசர்வ்வங்கி கணித்திருந்த இடைக்கால இலக்கான 4 சதவீதத்தை விட அதிகம் என்றும் ஆய்வு தெரிவிக்கிறது.
தற்போது தொழில்துறையினர் மத்தியில் நம்பகத்தன்மை உருவாகியுள்ளது. தேக்கநிலை மாறி வருகிறது என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது. புதிய வாடிக்கையாளரை தேடுவதிலும், விளம்பரத்துக்கு செலவிடும் போக்கும் அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.