

பொதுத் துறை நிறுவனங்களான ஏர் இந்தியா மற்றும் பிபிசிஎல் நிறுவனங்களின் பங்குகளை வாங்கும் தனியார் நிறுவனங்கள் இவற்றில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க அனுமதி கிடையாது என்று முதலீடு மற்றும் பொது சொத்து நிர்வாகத் துறை (டிபாம்) செயலர் டி.கே. பாண்டே தெரிவித்துள்ளார்.
தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் பொதுத் துறை நிறுவனங்களில் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இதேபோல இவ்விரு நிறுவனங்களை வாங்கும் தனியார் நிறுவனங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க நினைப்பர். ஆனால், பங்குபரிமாற்ற நடவடிக்கையில் ஊழியர்களின் வேலைக்கு உத்திரவாதம் தரும் வகையிலான விதிமுறைகள் இடம்பெறும் என்று அவர் குறிப்பிட்டார். இதனால் ஆள்குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டார். பங்கு விலக்கல் நடவடிக்கை இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று குறிப்பிட்ட அவர், முதலில் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க விரும்பும் நிறுவனங்களின் விண்ணப்பங்கள் மார்ச் 17-ம் தேதி பரிசீலனைக்கு எடுக்கப்படும். இதைத் தொடர்ந்து அடுத்த சில நாட்களில் பிபிசிஎல் நிறுவனப் பங்கு விலக்கல் நடவடிக்கைக்கான விருப்பம் கோரும் அறிவிப்பு வெளியாகும்.
ஊழியர்களின் வேலையைக் காக்கும் வகையில் பங்குப் பரிவர்த்தனை ஒப்பந்தத்தில் எத்தகைய நிபந்தனைகள் சேர்க்கப்படும் என்ற விவரத்தை அவர் வெளியிட மறுத்துவிட்டார். 1932-ம்ஆண்டு டாடா ஏர்லைன்ஸாக தொடங்கப்பட்ட நிறுவனம் பின்னர் அரசு நிறுவனமானது. இந்நிறுவனம் 2007-ம் ஆண்டிலிருந்து நஷ்டத்தை சந்தித்து வருகிறது. தற்போது இந்நிறுவனத்துக்கு உள்ள கடன் சுமை ரூ.60,074 கோடியாகும். இதில்நிறுவனத்தை வாங்கும் நிறுவனம் ரூ.23,286 கோடி தொகைக்கு பொறுப்பு ஏற்க வேண்டும்.
பிபிசிஎல் நிறுவனத்தைப் பொறுத்தமட்டில் அரசு வசம் உள்ள 53.29 சதவீத பங்குகளை முழுமையாக வாங்க முன்வரும் நிறுவனத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்தியாவின் எண்ணெய் சுத்திகரிப்பில் பிபிசிஎல் 14 சதவீதம் பங்கு வகிக்கிறது. இந்நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ.1 லட்சம் கோடியாகும். இதில் அரசின் பங்குமதிப்பு ரூ.54 ஆயிரம் கோடியாகும்.
இந்நிறுவனத்தை வாங்கும் நிறுவனம் வெளிச்சந்தையில் இதே அளவுக்கு 26 சதவீத பங்குகளை வாங்க அனுமதிக்கப்படும். பிபிசிஎல் நிறுவனத்துக்கு மும்பை, கொச்சி, பினா (ம.பி), நும்லிகர் (அசாம்) ஆகிய இடங்களில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளன. இவை ஆண்டுக்கு 38.3 மில்லியன் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கும் திறன் கொண்டவை. இந்நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 15,177 பெட்ரோல் நிரப்பு நிலையங்கள் மற்றும் 6,011 எல்பிஜி விநியோக மையங்கள் உள்ளன. இது தவிர 51 எல்பிஜி பாட்லிங் ஆலைகள் உள்ளன. இந்நிறுவனத்துக்கு 250 விமான எரிபொருள் நிரப்பு மையங்களும் உள்ளன.