2020-21-ம் நிதி ஆண்டில் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் ரூ.98,521 கோடி அளவில் முதலீடு

2020-21-ம் நிதி ஆண்டில் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் ரூ.98,521 கோடி அளவில் முதலீடு

Published on

ஓஎன்ஜிசி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உள்ளிட்ட பொதுத் துறைஎண்ணெய் நிறுவனங்கள் 2020-21-ம் நிதி ஆண்டில் ரூ.98,521கோடி முதலீடு செய்ய உள்ளன.இந்தியாவின் எண்ணெய் நுகர்வைபூர்த்தி செய்யும் வகையில் எண்ணெய், எரிவாயு, எண்ணெய் சுத்திகரிப்பு தொடர்பான கட்டமைப்புகளை விரிவாக்கும் நோக்கில் இந்த முதலீடு மேற்கொள்ளப்பட உள்ளது.

நடப்பு நிதி ஆண்டில் திட்டமிடப்பட்ட முதலீட்டைவிட இது 4 சதவீதம் அதிகம். நடப்பு நிதி ஆண்டில் பொதுத் துறை நிறுவனங்கள் மார்ச் 31 வரையில் ரூ.94,974 கோடி அளவில் முதலீடுகள் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தன. இந்நிலையில் வரும் நிதியாண்டில் ரூ.98,521 கோடி முதலீடு செய்ய உள்ளன.

ஓஎன்ஜிசி ரூ.32,501 கோடி அளவில் முதலீடு செய்ய உள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 19 சதவீதம் அதிகம். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ரூ.26,233 கோடி முதலீடு செய்ய உள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 17.4 சதவீதம் அதிகம். பாரத் பெட்ரோலியம் ரூ.9,000 கோடி முதலீடு செய்ய உள்ளது. கெயில் நிறுவனம் ரூ.5,412 கோடி அளவிலும், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ரூ.11,500 கோடி அளவிலும் முதலீடு செய்ய உள்ளன. சென்ற ஆண்டும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் இதே அளவிலேயே முதலீடு மேற்கொண்டது. ஆயில் இந்தியா நிறுவனம் நடப்பு நிதி ஆண்டில் ரூ.3,675 கோடி முதலீடு செய்துள்ள நிலையில், வரும் நிதி ஆண்டில் ரூ.3,877 கோடி முதலீடு செய்ய உள்ளது.

சமீபத்திய பட்ஜெட் அறிவிப்பில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இயற்கை எரிவாயுவை கொண்டு செல்லும் குழாய் இணைப்பை தற்போது இருக்கும் 16,200 கிலோ மீட்டரிலிருந்து 27,000 கிலோ மீட்டர் வரை விரிவாக்கம் செய்வதற்கான திட்டங்களை முன்வைத்துள்ளார். இயற்கை எரிவாயு பயன்பாட்டை 2030-க்குள் 15 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in