

வெளிநாடுகளிலிருந்து பர்னிச்சர்களை இறக்குமதி செய்வதற்கு கூடுதல் வரி விதிப்பது குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. உள்நாட்டு தொழில்களை பாதுகாக்கவும், இறக்குமதி செலவைக் கட்டுப்படுத்தவும் இத்தகைய நடவடிக்கை எடுக்க உள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசின் தொழில் மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தகம் சார்ந்த துறை மத்திய வர்த்தக அரசுக்கு இத்தகைய பரிந்துரையை அளித்துள்ளது. வெளிநாட்டு வர்த்தகம் சார்ந்த இயக்குநரகம் இது தொடர்பாக விரைவிலேயே அறிக்கை வெளியிடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பர்னிச்சர்களை கட்டுப்பாடு உள்ள பிரிவில் சேர்ப்பதன் மூலம் அதை இறக்குமதி செய்யும் இறக்குமதியாளர் அதற்குரிய லைசென்ஸ் பெற்றிருப்பது அவசியமாகும்.
2018-19-ம் நிwதி ஆண்டில் 60கோடி டாலர் அளவுக்கு பர்னிச்சர்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதில் சீனாவிலிருந்து மட்டும்30 கோடி டாலர் அளவுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. மலேசியா, ஜெர்மனி, இத்தாலி, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்தும் பர்னிச்சர்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
உலகிலேயே பர்னிச்சர் ஏற்றுமதியில் சீனா முன்னிலை வகிக்கிறது. பல நாடுகளுக்கும் சீனாவில் தயாரிக்கப்படும் பர்னிச்சர்கள் ஏற்றுமதியாகின்றன.
ஆண்டுதோறும் 10 கோடி டாலர் அளவுக்கு சீன பர்னிச்சர்கள் இந்தியாவுக்கு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் பர்னிச்சர் தயாரிப்பு தொழிலானது முறை சாரா தொழிலாக உள்ளது. உள்நாட்டு பர்னிச்சர் தொழில் அளவானது 500 கோடி டாலர் அளவுக்குஉள்ளது. இந்திய பர்னிச்சர் ஏற்றுமதியானது 150 கோடி டாலராகும். கடந்த மாதம் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதி மீது அரசு இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதித்தது. மலேசியாவிலிருந்து அதிக அளவில் பாமாயில் இறக்குமதி செய்வதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.