Published : 27 Jan 2020 02:44 PM
Last Updated : 27 Jan 2020 02:44 PM

சீனாவை உலுக்கும் கரோனா வைரஸ்: இந்திய பொருளாதாரத்தில் என்ன பாதிப்பு ஏற்படும்?

புதுடெல்லி

சீனாவை உலுக்கி வரும் கரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் பொருளாதாரத்திலும் பெரும் பாதிப்பு ஏற்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவில் சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹானில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மக் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, அவர்களுக்கு ‘கரோனா' வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. கரோனா வைரஸ் சீனாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் வைரஸ் காரணமாக பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் பொருளாதாரத்திலும் பெரும் பாதிப்பு ஏற்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

* முதலாவதாக சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா சார்ந்த பாதிப்பு ஏற்படும்.

* தாய்லாந்து, ஹாங்காங், சிங்கப்பூர் போன்றவை சீனவர்கள் அதிகஅளவு செல்லும் நாடுகளாகும். இந்த நாடுகளின் சுற்றுலா பொருளாதாரம் சீனாவை நம்பியே உள்ளது.

* இந்தியாவுக்கு அதிகஅளவில் வெளிநாட்டினர் வரும் நாடுகளின் பட்டியலில் சீனா 8-வது உள்ளது. 2018-ம் ஆண்டு 281769 பேர் சீன நாட்டினர் இந்தியா வந்துள்ளனர். சுற்றுலா மட்டுமின்றி தொழில் தொடர்பாகவும் அவர்கள் வருகை தந்துள்ளனர்.

* வெளிநாட்டினரின் வருகையால் பயன்பெறும் ஓட்டல்கள், உணவு விடுதிகள், வாகனங்கள், விமானப் போக்குவரத்து என பலவும் இதனால் பாதிப்படையும். 2018-ம் ஆண்டில் சீனாவில் இருந்து பயணிகள் வருகையால் மட்டும் நமது பொருளாதாரத்துக்கு அளித்த சுமார் 8 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பங்களிப்பு இருந்துள்ளது. சீனாவில் இருந்து வரும் ஒருவர் சராசரியாக 1.90 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளார்.

* இதுமட்டுமின்றி இந்தியாவின் நுகர்வோர் பொருள் உற்பத்தி தொடங்கி இயந்திரங்கள் வரை சீனாவை சார்ந்து இருக்கும் அனைத்து தொழில்களும் பாதிப்புக்குள்ளாகும். இந்திய பொருளாதாரத்தில் இதன் பங்களிப்பு அதிகமாகும்.

* கச்சா எண்ணெய் விலை கூட சரிவைடையும். கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் சர்வதேச சந்தையில் 5 சதவீதம் வரை கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் அதிகம் இறக்குமதி செய்யும் நாடான இந்தியாவுக்கு லாபம் தான். ஆனால் இது நுகர்வு தன்மையை பாதிக்கும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

* அதுபோலவே கச்சா எண்ணெயில் இருந்து பெட்ரோலியப் பொருட்களை தயாரித்து ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முக்கிய பங்காற்றி வருகிறது. கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி மற்றும் உலகளாவிய நுகர்வு குறைவால் இந்தியாவின் வர்த்தகம் பாதிக்கப்படக்கூடும்.

* இதுமட்டுமின்றி சீனாவில் ஏற்பட்டுள்ள கரோனா வைரஸ் பாதிப்பால் பல நாடுகளின் பொருளாதாரத்திலும் தாக்கம் ஏற்படக்கூடும். சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தியா, ஜப்பான், கொரியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஜிடிபியில் குறிப்பிடத்தக்க அளவுக்கு இதன் பாதிப்பு இருக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x