Published : 27 Jan 2020 08:22 AM
Last Updated : 27 Jan 2020 08:22 AM

இந்தியா இ-காமர்ஸ் துறையைத் தவறாகப் புரிந்திருக்கிறது: இங்கிலாந்து-இந்தியா பிசினஸ் கவுன்சில் கருத்து

இந்தியா இ-காமர்ஸ் துறையைஇன்னும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்றும், புதிய முதலீடுகளை வரவேற்க தயாராக இருக்க வேண்டும் என்றும் இங்கிலாந்து-இந்தியா பிசினஸ் கவுன்சில் தெரிவித்துள்ளது.

சில்லறை வர்த்தகர்கள் பாதிப்பு

சமீபமாக உலகின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் மீது இந்திய வர்த்தகஅமைப்புகள் கடும் விமர்சனங்களை வைத்துவருகின்றன. இந்திய சில்லறை வர்த்தகர்களை அமேசான், பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் அடியோடு அழித்துக்கொண்டிருக்கின்றன என்றுகூறப்பட்டுவருகிறது. இதுதொடர்பாக பெரிய அளவில் போராட்டங்களையும் முன்னெடுத்தனர்.

இந்நிலையில் அமேசான் இந்தியாவில் உள்ள சிறு, குறு வர்த்தக நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்க 1 பில்லியன் டாலர் அதாவது ரூ.7,000 கோடியை முதலீடு செய்யப் போவதாக அதன் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் அறிவித்தார். இதையடுத்து மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியுஷ் கோயல் அமேசான் அறிவித்துள்ள முதலீடு இந்தியாவுக்கு நன்மை செய்வதாக இல்லை என்று கருத்து தெரிவித்தார். இது பல தரப்பிலிருந்தும் எதிர்மறையான கருத்துகளைச் சந்தித்துவருகிறது.

இந்நிலையில் இங்கிலாந்து-இந்தியா பிசினஸ் கவுன்சில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளது. இந்த கவுன்சிலின் தலைமை செயல் அதிகாரி ரிச்சர்ட் ஹீல்ட் இதுகுறித்து கூறுகையில், “இந்திய அரசு வர்த்தக அமைப்புகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டியது அவசியம்தான்.

ஆனால், இ-காமர்ஸ் துறைகளில் புதிய முதலீடுகளை வரவேற்க வேண்டும். இந்தியா இ-காமர்ஸ் துறையை இன்னமும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. இந்திய நுகர்வோர்களுக்கு பலவகைகளிலும் நன்மை பயக்கக்கூடிய இ-காமர்ஸ் துறையை ஊக்குவிக்க வேண்டும்.

இந்தியாவின் பொருளாதார சூழல் தற்போது மோசமாக உள்ளது. ஜிடிபி 5 சதவீதம், 4.5 சதவீதம் எனக் குறைந்துள்ளது. இந்நிலையில் இந்தியப் பொருளாதாரத்துக்கு வரப்பிரசாதமாக உள்ள இ-காமர்ஸ் துறையை ஊக்குவிக்க வேண்டும். குறிப்பாக சிறிய தொழில் நிறுவனங்களுக்கு தங்களின் பொருட்களை விற்பனை செய்ய இ-காமர்ஸ் துறை பெரிதும் உதவுகிறது.

இ-காமர்ஸ் துறையின் பலன்களைப் பலரும் இன்னும் புரிந்துகொள்ளவில்லை. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமும் இ-காமர்ஸ் துறையில் தீவிரமாக இறங்கப்போவதாகத் தெரிவித்துள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது. இ-காமர்ஸ் துறை பல வகைகளிலும் இந்தியப் பொருளாதாரத்துக்கு அவசியமாக உள்ளது. எனவே முதலீடுகளை வரவேற்க தயாராக இருக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x