

பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் அறிவிக்கப்படவுள்ள நிலையில், மத்திய அரசு அமைப்பு ரீதியிலான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளர். நுகர்வையும், வளர்ச்சியையும் அதிகரிக்க வேண்டுமென்றால், மத்திய அரசு நிதி திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
டெல்லி செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பேசிய அவர் மேலும் கூறியதாவது:
ரிசர்வ் வங்கிக்கென்று சில எல்லைகள் உள்ளன. அந்த எல்லைக்குட்பட்டே ரிசர்வ் வங்கியால் செயல்பட முடியும். எனில் மத்திய அரசுதான் வளர்ச்சியை ஊக்குவிக்க சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
கடந்த ஓராண்டில் மட்டும் ரிசர்வ் வங்கி தொடர்ச்சியாக 5 முறை ரெப்போ விகித்தைக் குறைத்தது. மொத்தமாக கடந்த ஆண்டில் 135 அடிப்படைப் புள்ளிகள் வரை ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி அதன் எல்லைக்குட்பட்டே செயல்பட முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
உணவு பதப்படுத்தும் தொழில்கள், சுற்றுலாத் துறை, இணைய வணிகம், ஸ்டார்ட் அப் ஆகியவை வளர்ச்சியை சாத்தியப்படுத்தும் துறைகள் என்று சுட்டிக்காட்டிய அவர், மத்திய அரசு அதன் நிதி மூலதனங்களை சிறப்பாக பயன்படுத்துவதன் மூலம் வளர்ச்சியை ஊக்குவிக்க முடியும் என்று கூறினார். தற்போதைய நிலையில் இந்தியாவின் பொருளாதாரச் சூழலை மதிப்பீடு செய்வது சவாலானதாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
இந்தியா கடும் பொருளாதார சரிவை எதிர்கொண்டுள்ளது. மக்களின் நுகர்வு திறன் குறைந்து இருப்பது மிக முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 4.8 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்களிடம் பணம் புழங்கும் வகையில் மத்திய நிதித் திட்டங்கள் வகுக்க வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.