Published : 26 Jan 2020 08:38 AM
Last Updated : 26 Jan 2020 08:38 AM

கூடுதலாக 6 பில்லியன் டாலருக்கு இறக்குமதி செய்தால் இந்தியாவுக்கு மீண்டும் வர்த்தக முன்னுரிமை அந்தஸ்து: அமெரிக்கா நிபந்தனை

இந்தியாவுக்கு அளிக்கப்பட்டு வந்தவர்த்தக முன்னுரிமை அந்தஸ்தை கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்கா ரத்து செய்தது. இந்நிலையில், அமெரிக்க வேளாண் பொருட்களை கூடுதலாக 6 பில்லியன் டாலருக்கு இந்தியா இறக்குமதி செய்யும்பட்சத்தில், மீண்டும் வர்த்தக முன்னுரிமை அந்தஸ்தை வழங்குவதாக அமெரிக்கா நிபந்தனை விதித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதவிர, பதப்படுத்தப்பட்ட கோழிகளை இந்தியா அதிக அளவு இறக்குமதி செய்ய வேண்டும் என்றும் அதன் மீதான இறக்குமதிவரியைக் குறைக்க வேண்டும் என்றும் அமெரிக்கா நிபந்தனை விதித்துள்ளது. இந்த நிபந்தனையை அமெரிக்கா கடந்த டிசம்பர் மாதம் முன்வைத்ததாகக் கூறப்படுகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அடுத்த மாதம் இந்தியா வரவுள்ள நிலையில், இந்த நிபந்தனைகள் தொடர்பான கலந்தாலோசனை இருதரப்பிலும் தீவிரமடைந்துள்ளது.

வர்த்தக முன்னுரிமை அந்தஸ்து தொடர்பாக சில விதிமுறைகள் உள்ளன. உலகளாவிய தொழிலாளர் விதிகளை கடைபிடித்தல், அறிவுசார் உடைமைகளுக்குப் பாதுகாப்பு அளித்தல், முறையான வர்த்தக உறவைப் பேணுதல் போன்றவை அந்த விதிகளின்கீழ் வரக்ககூடியவை. வர்த்தக முன்னுரிமை அந்தஸ்தைப் பெறும் நாடுகள் இந்த விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அவ்வகையில், அமெரிக்காவின் வர்த்தக முன்னுரிமை அந்தஸ்தை பெறும் நாடுகள் குறிப்பிட்ட பொருட்களுக்கு வரி ஏதும் செலுத்தாமல் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து கொள்ளலாம். அதன்படி, வாகன உதிரி பாகங்கள், ஜவுளிப் பொருட்கள் என 2000 தயாரிப்புகளை இந்தியாஅமெரிக்காவுக்கு வரி ஏதும் இல்லாமல் ஏற்றுமதி செய்து வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம், இந்தியாவுக்கு அளிக்கப்பட்டிருந்த வர்த்தக முன்னுரிமையை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ரத்து செய்தார்.

அமெரிக்க இறக்குமதிக்கு இந்தியா அதிக கட்டுப்பாடுகள் விதிக்கிறது. அந்த வகையில் முறையான வர்த்தக உறவை கடைபிடிக்க இந்தியா தவறியுள்ளது என்பதை காரணமாக முன்வைத்து, அமெரிக்கா அதன் வர்த்தக முன்னுரிமை பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கியது.

அமெரிக்காவிலுள்ள குறுந் தொழில் நிறுவனங்களே, வர்த்தக முன்னுரிமை அளிக்கப்பட்ட நாடுகளிலிருந்து செய்யப்படும் இறக்குமதிகளால் அதிக அளவில் பயன்பெற்றுவருகின்றன. அந்த முன்னுரிமை பட்டியல்களிலிருந்து நாடுகள் நீக்கப்படும்போது அமெரிக்க குறுந்தொழில் நிறுவனங்கள் அதன் இறக்குமதிக்கு கூடுதல் வரிசெலுத்த வேண்டிய நிலை உருவாகும். அதன் விளைவாக அமெரிக்காவில் வேலையின்மைஉருவாகும் இந்நிலையில், இந்தியாவை அப்பட்டியலில் இருந்து நீக்கியது அமெரிக்காவையே பாதிக்கும் என்று கூறப்பட்டது.

கடந்த 2018-ம் ஆண்டின் கணக்கின்படி, இந்தியா 324.7 பில்லியன் டாலர் மதிப்புக்கு உலகளாவிய அளவில் ஏற்றுமதி செய்திருக்கிறது. அதில் 51.4 பில்லியன் டாலர் மதிப்பில் மட்டுமே அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. அதிலும் அமெரிக்காவின் வர்த்தக முன்னுரிமை திட்டத்தின்கீழ் இந்தியா செய்த ஏற்றுமதியின் மதிப்பு 6.35 பில்லியன் டாலர் மட்டுமே.

கடந்த ஆண்டு இறுதியில் இந்தவர்த்தக உறவு தொடர்பாக இருநாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. ஆனால் இறுதி முடிவு எட்டப்படவில்லை. இந்நிலையில் ட்ரம்ப்பின் இந்திய வருகையையொட்டி மீண்டும் அப்பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x