

டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதாரா மாநாட்டில் மத்தியப் பிரதேச அரசு ரூ.4,125 கோடி அளவில் முதலீடுகளை ஈர்த்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் 50-வது உலகப் பொருளா தார மாநாட்டில் மத்தியப் பிரதேச முதல்வர் கமல் நாத், அம்மாநில தலைமைச் செயலாளர் மொஹந்தி, தொழிலக முதன்மைச் செயலாளர் ராஜேஷ் ராஜோரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அம்மாநாட்டில் மத்தியப் பிரதேச அரசு, உலக முதலீட்டாளர்களுடன் சந்திப்பு மேற்கொண்டு, ரூ.4,125 கோடி அளவில் முதலீடுகளை ஈர்த்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் மந்திதீப் நகரில் செயல்பட்டு வரும் தாவத் உணவு நிறுவனம், சவூதி அரேபியா வேளாண்மை மற்றும் கால்நடை முதலீட்டு நிறுவனத்திடம் இருந்து ரூ.125 கோடி முதலீட்டைப் பெற்றுள்ளது.
ஜப்பானைச் சேர்ந்த சாஃப்ட் பேங்க் எனர்ஜி மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆக்டிஸ் ஆகிய இரு நிறுவனங்கள், மத்தியப் பிரதேசத்தில் தனித்தனியே 325 மெகாவாட்ஸ் அளவில் காற்றாலை நிலையங் கள் அமைக்க முதலீடு செய்ய ஒப்புதல் தெரிவித்துள்ளன. இத்திட்டங்களில் மொத்த மாக ரூ.4,000 கோடி அளவில் முதலீடு செய்ய உள்ளன.
அமேசான் வெப் சர்வீஸின் துணைத் தலைவர் மேக்ஸ் பீட்டர்ஸன் உடன் மத்திய பிரதேச முதல்வர் கமல் நாத் சந்திப்பு மேற்கொண்டதைத் தொடர்ந்து, அந்நிறுவனம் மத்திய பிரதேசத்தில் தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது.