Published : 23 Jan 2020 09:05 AM
Last Updated : 23 Jan 2020 09:05 AM

ரூ.7 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 5% வரி- பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வாய்ப்பு

2020-21 நிதி ஆண்டுக்கான மத்தியபட்ஜெட்டில் வருமான வரி விகிதங்களில் மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக ரூ.7 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 5 சதவீத வரி விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு தற்போது எதிர்கொண்டு வரும் பொருளாதார மந்த நிலையிலிருந்து மீண்டு வர மக்களிடையே பணப்புழக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்று பரவலாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் வரும் பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட்டில் வருமான வரி தொடர்பான மாற்றங்கள் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகின்றன.

முதலீடுகளை அதிகரிப்பதற்காக நிறுவன வரி கடந்த பட்ஜெட்டில் குறைக்கப்பட்டது. ஆனால், மக்களிடம் பணம் இல்லாமல் நுகர்வு, தேவை அதிகரிக்காது என்பதால், முதலீடுகள் மேற்கொள்வதில் நிறுவனங்கள் தயக்கம் காட்டின.

எனவே, மக்களிடையே பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், நுகர்வை ஊக்குவிக்கவும் இந்தபட்ஜெட்டில் வருமான வரி விகிதங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்படலாம் எனக் கூறப்படுகிறது.

இதன்படி தற்போது ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 5 சதவீத வரி விதிக்கப்பட்டு வருகிறது. இந்த வரம்பு ரூ.7 லட்சம் வரை உயர்த்தப்படலாம் எனத் தெரிகிறது.

மேலும் ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை 10 சதவீதமாகவும், ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை 20 சதவீதமாகவும் நிர்ணயிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x