Published : 28 Aug 2015 09:59 AM
Last Updated : 28 Aug 2015 09:59 AM

பருவமழையும் பணவீக்கமும் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை: ரிசர்வ் வங்கி கணிப்பு

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையாக பருவமழை பொய்த்துப் போவது மற்றும் பணவீக்கம் அதிகரிப்பது உள்ளிட்ட காரணிகள் இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு பருவமழை குறையும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ள நிலையில், ஆங்காங்கே பெய்துள்ள மழையால், மழையளவு எதிர்பார்த்த அளவுக்கு பொய்த்துப்போகாது என்ற எதிர்பார்ப்பு உருவானது. அதிகபட்சம் வறட்சியின் கோரப்பிடியிலிருந்து சிக்காமல் தப்பலாம் என்ற அளவுக்கு பரவலாக மழை பெய்து காப்பாற்றியுள்ளது. இருந்தாலும் பருவமழை பொய்த்துப் போவதன் பாதிப்பு முற்றிலுமாக நீங்கவில்லை.

இதன் உப விளைவாக உணவுப் பொருள்களின் விலையேற்றம் பெரும் சவாலாக இருக்கும். இதனால் பணவீக்கம் அதிகரிப்பதைக் கட்டுக்குள் வைப்பது சவாலானதாக இருக்கும் என்று ஆர்பிஐ வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலைமையை எதிர்கொள்ள ஒருங்கிணைந்த உணவுப் பொருள் நிர்வாக உத்திகள் மிகவும் அவசியம். அதன் மூலம்தான் விரயமாவதைத் தடுத்து பருவமழை பாதிப்பால் ஏற்படும் தாக்கத்தை பெருமளவு குறைக்க முடியும் என்று ஆர்பிஐ சுட்டிக் காட்டியுள்ளது.

2016-ம் நிதி ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் நாட்டின் வளர்ச்சி 7.6 சதவீத அளவுக்கு இருக்கும் என ஆர்பிஐ கணித்துள்ளது. இந்த அளவானது 2015-ம் நிதி ஆண்டில் முதல் நான்கு மாதங்களில் எட்டப்பட்ட 7.2 சதவீத வளர்ச்சியை விட சற்று அதிகமாகும்.

பருவமழை பாதிப்பு மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு பார்க்கும்போது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நாட்டின் பணவீக்க விகிதம் 6 சதவீதமாக இருக்கும் என நம்புவதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது. 2017-ம் ஆண்டில் இது 6 சதவீதத்துக்கும் கீழாகக் குறைய வாய்ப்பிருப்பதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

பொருளாதார வளர்ச்சி வாய்ப்புகளை கணிக்கும்போது அது படிப்படியான வளர்ச்சியாக இருக்கும் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

அதேபோல வரி வருவாயைக் கணக்கிடும்போது அரசு பட்ஜெட்டில் நிர்ணயித்த இலக்கை எட்டும் என்று ஆர்பிஐ நம்புகிறது.

அரசு பங்கு விலக்கல் நடவடிக்கைக்கு முன்னுரிமை அளித்தாலும், பங்கு விற்பனைக்கு ஏற்ற சூழல் சந்தையில் நிலவ வேண்டியது அவசியம் என்று சுட்டிக் காட்டியுள்ள ஆர்பிஐ, சேவைத் துறை வர்த்தக வருவாய், சாப்ட்வேர் ஏற்றுமதி, சுற்றுலா வருமானம் உள்ளிட்டவற்றால் நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 1.5 சதவீத அளவுக்குக் குறையும் என்று குறிப்பிட்டுள்ளது.

தற்போது கையிருப்பில் உள்ள 35,000 கோடி டாலர் அந்நியச் செலாவணி மூலம் இறக்குமதி உள்ளிட்டவற்றை எளிதில் சமாளிக்க முடியும் என்று ஆர்பிஐ குறிப்பிட்டுள்ளது.

திவால் குறித்த சர்வதேச விதிமுறைகள் தொடர்பான வரைவு அறிக்கை சட்டமாக மாறும்பட்சத்தில் இங்கு தொழில் தொடங்குவது எளிதாகும்.

இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதம் அறிவிக்கும்பட்சத்தில் இந்திய பங்குச் சந்தையிலிருந்து அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பெருமளவு வெளியேறும் வாய்ப்புள்ளது. இதனால் நிதி திரட்டுவது கடினமானதாகும். அத்தகைய சூழலில் கடன் பத்திர வெளியீடுகள் அதிகரிக்கும் என்று ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.

சட்டம் மற்றும் ஒழுங்குமுறை ஆணையங்களின் செயல்பாடுகள் மேம்பட வேண்டும். இதேபோல தொழிலாளர் சட்ட சீர்திருத்தம் அவசியம். வரி சீர்திருத்தம், நிர்வாக சூழல் ஆகியன மேம்பட வேண்டும் என்று ஆர்பிஐ அறிக்கை வலியுறுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x