

நடப்பு நிதி ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் தங்கம் இறக்குமதி 61 சதவீதம் அதிகரித்து 155 டன்னாக இருக்கிறது. கடந்த வருடம் ஏப்ரல் மே மாத காலத்தில் 96 டன் அளவுக்கு இருந்த தங்க இறக்குமதி இப்போது 155 டன்னாக அதிகரித்திருக்கிறது.
தங்கம் இறக்குமதி செய்யும் நாடுகளில் முக்கியமானது இந்தியா. ஜுவல்லரி தேவைக்காக தங்கத்துக்கு தேவை அதிகம். தங்கம் அதிக அளவில் இறக்குமதி செய்வதால் நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிக்கிறது.
கடந்த 2014-15-ம் நிதி ஆண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 1.3 சதவீதமாக (ஜிடிபியில்) இருந்தது. 2014-15-ம் நிதி ஆண்டில் நாட்டின் மொத்த தங்க இறக்குமதி 915 டன்னாக இருந்தது. அதற்கு முந்தைய நிதி ஆண்டில் 661 டன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 1.8 முதல் 2 சதவீதமாக இருக்கும் என்று டிபிஎஸ் நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. முதல் காலாண்டில் அதிகமாக இருந்தாலும் ஒட்டு மொத்த நிதி ஆண்டில் 2 சதவீதத்துக்குள் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த காலாண்டுடன் ஒப்பிடும் போது 0.3 சதவீதம் அளவுக்கு நடப்பு கணக்குப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.