

நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 4.8 சதவீதமாகக் குறையும் என்று சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) கணித்துள்ளது. உள்நாட்டுத் தேவை மற்றும்வங்கியல்லாத நிதி நிறுவனங்களிடம் (என்பிஎஃப்சி) பணப்புழக்கம் குறைந்துள்ளதால் இந்தியா பொருளாதார நெருக்கடியை சந்தித்து இருப்பதாக ஐஎம்எஃப் தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் வெளியிட்ட கணிப்பில், நடப்பு நிதி ஆண்டில் இந்தியா 6.1 சதவீத வளர்ச்சி காணும் என்று தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அதை 4.8 சதவீதமாகக் குறைத்துள்ளது. அதேபோல், 2020-21 நிதி ஆண்டில் வளர்ச்சி 5.8 சதவீதமாகவும், 2021-22-ல் 6.5 சதவீதமாகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
இந்தியாவின் வளர்ச்சி குறைவால், உலகளாவிய பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்படுவதாக ஐஎம்எஃப் கூறியுள்ளது. இந்தியாவில் ஏற்பட்டு இருக்கும் பொருளாதார மந்த நிலையால், உலகளாவியப் பொருளாதார வளர்ச்சி 2019-ல் 2.9 சதவீதமாகக் குறையும் என்றும், அது 2020-ல் 3.3 சதவீதமாகவும், 2021-ல் 3.4 சதவீதமாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்தியா கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து உள்ளது. முதலீடுகள் பெருமளவில் சரிந்துள்ளன. மக்களின் நுகர்வு திறன் மிக மோசமான அளவில் குறைந்துள்ளதால், உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இந்தச் சூழலில் நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 5 சதவீதமாகவும், இரண்டாம் காலாண்டில் 4.5 சதவீதமாக சரிந்தது. இந்நிலையில் ஒட்டுமொத்த அளவில் நடப்பு ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 5 சதவீதமாகக் குறையும் என்று மத்திய புள்ளிவிவரங்கள் அலுவலகம், உலக வங்கி, ஐநா ஆகியவை கணிப்பு வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.