Published : 21 Jan 2020 07:16 PM
Last Updated : 21 Jan 2020 07:16 PM

ரூ. 2197 கோடி நஷ்டம்: தள்ளாடும் உபெர் ஈட்ஸ்; சொமாட்டோவுக்கு கை மாறியது ஏன்?

வீடுகளுக்கே தேடிச் சென்று உணவு டெலிவரி செய்யும் தொழில் சமீபகாலமாக அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. எந்த நேரத்திற்கும் வீடு தேடி உணவு வரும் என்பதால் வாடிக்கையாளர்கள் மத்தியிலும் உணவு டெலிவரி நிறுவனங்கள் பிரபலமடைந்துள்ளன. குறிப்பாக சென்னை உட்பட பெருநகரங்களில் உணவு சேவையில் டெலிவரி நிறுவனங்கள் பெருமளவு கொடிகட்டி பறக்கின்றன.
அதிரடி ஆபர்கள் மூலம் வாடிக்கையாளர்களை கவர்ந்த, உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் பெருமளவு வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகின்றன.

உபெர் ஈட்ஸ், சொமோட்டோ, ஸவிஜி என பல நிறுவனங்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனால் கடுமையான தொழில் போட்டியை இந்த நிறுவனங்கள் சந்தித்து வருகின்றன. அதிகரித்து வரும் போட்டி, நிலவி வரும் மந்தநிலை என பல பிரச்சனைகளால் உபெர் ஈட்ஸ் நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாக தகவல் வெளியானது. உபர் ஈட்ஸ் நிறுவனம் தனது இந்திய வர்த்தகங்களை சொமாட்டோ நிறுவனத்திடம் விற்றுள்ளது.

காரணம் என்ன?

கடந்த 2017, ஆண்டில் நடுப்பகுதியில், இந்தியாவில் தனது காலை ஊன்றியது உபெர் ஈட்ஸ். இந்த நிலையில் இத்துறையில் இந்த நிறுவனம் வீழ்ச்சி கண்டு வருகிறது. 2019-ம் ஆண்டு டிசம்பருடன் முடிந்த கடைசி 5 மாதங்களில் மட்டும் ரூ. 2197 கோடி ரூபாய் அளவுக்கு உபெர் ஈட்ஸ் நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்தியாவில் உள்ள தனது வர்த்தகத்தை சொமாட்டோவிடம் விற்றுள்ளது.

இதுகுறித்து சொமாட்டோவின் தலைமை செயல் அதிகாரியான தீபிந்தர் கோயல் கூறுகையில் ‘‘ இந்தியாவில் உள்ள உபெரின் உணவு வினியோக வர்த்தகத்தத்தை வாங்கியுள்ளோம். மேலும் இந்திய உணவு வினியோகத்தில் உபெருக்கு 9.99% பங்கு இருக்கும். அதனை நாங்கள் வாங்கியுள்ளோம். இன்று முதல் உபெர் ஈட்ஸின் செயல்பாடுகள், நேரடி உணவகங்கள், வினியோக பார்ட்னர்கள், உபெர் ஈட்ஸ் பயனர்கள் சொமாட்டோவிற்கு மாற்றப்படுவர்கள்.’’ எனக் கூறினார்.

உபெர் ஈட்ஸ் சோமேட்டோ ஒப்பந்தத்தின் மதிப்பானது 300 - 350 மில்லியன் டாலர் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. உபெர் நிறுவனம் கார் மற்றும் வாகன சேவையில் கூடுதல் கவனம் செலுத்தப்போவதாகவும், அதன் காரணமாக நஷ்டத்தில் இயங்கும் தனது உபெர் ஈட்ஸ் நிறுவனத்தை விற்க முடிவெடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் சொமாட்டோ நிறுவனத்தின் சொத்து மதிப்பு 3.55 பில்லியன் டாலர்களாக உயரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x