

இந்தியாவில் பொருட்களை டெலிவரி செய்வதற்கு பேட்டரியில் இயங்கும் ஆட்டோ ரிக்ஷாக்களை பயன்படுத்த அமேசான் முடிவு செய்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 10 ஆயிரம் பேட்டரி ரிக்ஷாக்களை வாங்கப் போவதாக நிறுவனர் ஜெஃப் பிஸோஸ் அறிவித்துள்ளார்.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்தில் தங்கள் நிறுவனம் பேட்டரி வாகனத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். முழுமையான பேட்டரி வாகன பயன்பாடு மூலம் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைத்து புவி வெப்பமடைவதைக் குறைக்க உதவ முடிவு செய்துள்ளதாக அவர் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர டெலிவரி வாகனங்கள் பேட்டரியில் இயங்கக் கூடியதாக இருக்கும். 20பெரிய நகரங்களில் குறிப்பாக அகமதாபாத், பெங்களூரு, கோவை, டெல்லி என்சிஆர், ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் இவை பயன்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு சில நகரங்களில் சோதனை முயற்சியாக பேட்டரிவாகனங்கள் இயக்கி பார்க்கப்பட்டன. இதில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து இத்தகைய வாகனங்களை பெருமளவில் பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக நிறுவனம் வெளியிட்டஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசும் பேட்டரி வாகனங்கள் உபயோகத்தை ஊக்குவிப்பதோடு மானிய சலுகையும் அளிப்பதால் பேட்டரி வாகனங்களை அதிக அளவில் பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025-ம் ஆண்டுக்குள் 10 ஆயிரம் பேட்டரி வாகனங்கள் புழக்கத்தில் இருக்கும் என்று நிறுவனத்தின் துணைத் தலைவர் அகில் சக்ஸேனா தெரிவித்துள்ளார்.