Published : 21 Jan 2020 06:48 AM
Last Updated : 21 Jan 2020 06:48 AM

இந்தியாவில் 63 கோடீஸ்வரர்களிடம் உள்ள சொத்து மத்திய அரசின் ஓராண்டு பட்ஜெட்டை விட அதிகம்: ஆக்ஸ்ஃபாம் அறிக்கை தகவல்

டாவோஸ்

இந்தியாவில் உள்ள ஒரு சதவீதபெரும் பணக்காரர்களின் மொத்தசொத்து மதிப்பானது 70 சதவீதமக்களின் சொத்து மதிப்பை விடநான்கு மடங்கு அதிகமாக உள்ளது. உலக பொருளாதார பேரவை(டபிள்யூஇஎப்) வெளியிட்டஅறிக்கையில் இந்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பானது ஓராண்டுக்கு மத்திய அரசு போடும் பட்ஜெட் மதிப்பை விட அதிகம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள 63 கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பானது 2018-19-ம் ஆண்டு போடப்பட்ட மத்திய பட்ஜெட்டை விட (ரூ. 24,42,200 கோடி) அதிகம் என்று சுட்டிக்காட்டியுள்ளது.

உலகில் மொத்தம் உள்ள 2,153 கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பானது 460 கோடி மக்களின் சொத்து மதிப்பை விட அதிகமாக உள்ளதாக ஆக்ஸ்ஃபாம் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது. கடந்தஓராண்டில் இவர்களின் சொத்து மதிப்பு சரிந்த போதிலும், உலகம்முழுவதும் ஏழை-பணக்காரர்இடையிலான விகிதம் அதிகரித்துள்ளது என்ற விவரத்தையும் அது வெளியிட்டுள்ளது.

ஊதிய விகிதம், பாலின பேதம் ஆகியன குறித்து டாவோஸில் நடைபெற உள்ள ஐந்து நாள் மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. சர்வதேச பொருளாதார நிலையில் காணப்படும் நெகிழ்வுத் தன்மை சிறிய பொருளாதார நாடுகளில் நிதி ஸ்திரத்தன்மையை வெகுவாக பாதிக்கும் என்றும் இது 2019-ல் அதிகம் காணப்பட்டதாக அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

சர்வதேச அளவில் கடந்த 30ஆண்டுகளில் ஏற்றத் தாழ்வு விகிதம்கணிசமாக குறைந்து வந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ள அறிக்கை, ஊதிய விகிதத்தில் அதிக ஏற்றத்தாழ்வு காணப்படுவதாக எச்சரித்துள்ளது. வீட்டு பணிப்பெண் ஒருவர்22,277 ஆண்டுகள் சம்பாதிக்கும் தொகையானது ஓராண்டில் ஒரு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியின் சம்பளத்துக்கு நிகராக உள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.

ஒரு சிஇஓ-வின் ஒரு விநாடி சம்பளம் ரூ.106. அவர் 10 நிமிடத்தில் சம்பாதிக்கும் சம்பளம்தான் ஓராண்டில் ஒரு வீட்டு பணிப்பெண்ணின் ஊதியமாக உள்ளது என சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தியாவில் ஒரு நாளைக்கு பெண்களும், சிறுமியரும் ஊதியமின்றி பணியாற்றும் நேரம் 326கோடி மணி நேரமாகும். இதை அவர்கள் ஊதியமாக ஈட்டியிருந்தால் ரூ.19 லட்சம் கோடியாக இருந்திருக்கும். இது இந்தியாவில் கல்விக்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் தொகையை விட 20 மடங்குஅதிகமாகும். 2019-ம் ஆண்டு கல்விக்கு பட்ஜெட்டில் ஒதுக்கிய தொகை ரூ.93 ஆயிரம் கோடியாகும். நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரசு முதலீடு 2 சதவீதமாகும். இதன் மூலம் 1.10 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கியிருக்க முடியும். இதன் மூலம் 2018-ல் 1.10 கோடி வேலையிழப்பை ஈடுகட்டியிருக்க முடியும் என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.

பணக்காரர்கள் தாங்கள் செலுத்தும் வரி தொகையின் அளவை விட கூடுதலாக 0.5 சதவீதம் தொகையை அடுத்த 10 ஆண்டுகளுக்கு செலுத்தினால் அதன் மூலம்11.70 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கலாம். அதேபோல முதியோர், குழந்தை நலன், கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவற்றுக்கு கூடுதலாகச் செலவிட முடியும் என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x