

இந்தியா பாமாயில் இறக்குமதியை நிறுத்திக் கொண்டுள்ள நிலையில் அதற்கு பதிலடி கொடுப்பதற்கு நாங்கள் மிகச் சிறிய நாடு தான், மாற்று வழிகளை யோசிப்போம் என மலேசிய பிரதமர் மகாதீர் முகமது கூறியுள்ளார்.
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக இந்தியாவின் பல இடங்களில் போராட்டம் நீடித்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவின் குடியுரிமைத் திருத்த சட்டத்தை மலேசிய பிரதமர் மகாதீர் முகமது விமர்சித்தார். அவர் கூறும்போது, “மதச்சார்பற்ற நாடு என்று தன்னை கூறிக் கொள்ளும் இந்தியா, முஸ்லிம்களின் குடியுரிமையைப் பறிக்க நடவடிக்கை எடுத்து வருவதைக் கண்டு நான் வருந்துகிறேன். இதே நடவடிக்கையை நாங்கள் எங்கள் நாட்டில் செய்தால் என்ன நடக்கும் என்று தெரியவில்லை. இங்கு குழப்பமும், நிலையற்றத்தன்மையும் உண்டாகும். அனைவரும் பாதிக்கப்படுவார்கள்” என்று தெரிவித்தார்.
மலேசிய பிரதமர் கருத்துக்கு கண்டனம் தெரிவித்த இந்திய வெளியுறவு அமைச்சகம், இது இந்தியாவின் உள்விவகாரம் என்று பதிலளித்து. இதனால் இந்திய – மலேசிய உறவு பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது மலேசிய நிறுவனங்களிடமிருந்து கச்சா பாமாயில் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் வாங்குவது தொடர்பான ஆர்டர்களை இந்திய நிறுவனங்கள் முற்றிலுமாக நிறுத்திவிட்டன.
கச்சா பாமாயில் இறக்குமதிகுறித்து எவ்வித உத்தரவும் பிறப்பிக்காத நிலையில் நிறுவனங்கள் அதையும் இறக்குமதி செய்ய முன்வரவில்லை. மலேசியாவுக்குப் பதிலாக இந்தோனேசியாவிலிருந்து கூடுதல் விலைக்கு இறக்குமதி செய்ய தொடங்கியுள்ளனர்.
மலேசியாவிலிருந்து அதிக அளவில் பாமாயில் இறக்குமதி செய்யும் இந்தியா, தனது இறக்குமதியை முற்றிலுமாக நிறுத்தினால் அது மலேசியாவுக்கு பெரும் நெருக்குதலாக அமைந்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த மலேசிய பிரதமர் மகாதீர் முகமது ‘‘நாங்கள் அதிகஅளவில் இந்தியாவுக்கு பாமாயில் ஏற்றுமதி செய்யும் நிலையில் இந்த கட்டுப்பாட்டால் கவலையடைகிறோம். ஆனால் அதற்காக தவறாக ஏதும் நடந்தால் அமைதியாக இருக்க மாட்டோம். எங்கள் கருத்தை சுதந்திரமாக சொல்வோம்.’’ எனக் கூறியிருந்தார்.
இந்தநிலையில் பாமாயில் இறக்குமதி விவகாரம் தொடர்பாக அவர் மீண்டும் கருத்து கூறியுள்ளார். லங்காவியில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளி்த்த மகாதீர் முகமது கூறியதாவது:
‘‘மலேசியாவிலிருந்து அதிக அளவில் பாமாயில் இறக்குமதி செய்யும் இந்தியா அதனை நிறுத்திக் கொண்டுள்ள நிலையில் அதற்கு பதிலடி கொடுப்பதற்கு நாங்கள் மிகச் சிறிய நாடு தான். அதனால் நாங்கள் மாற்று வழிகள் குறித்து யோசித்து வருகிறோம். விரைவில் இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்போம்’’ எனக் கூறினார்.