

பிரெஞ்சு தீவில் உள்ள விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான அரண்மனை பாணியிலான பிரமாண்ட வீடு மீட்க முடியாத அளவுக்கு சிதிலமடைந்து இருக்கிறது என்று மல்லையாவுக்கு கடன் வழங்கிய வங்கி ஒன்று குற்றம்சாட்டியுள்ளது. தவிர, கடன் வாங்க அடமானம் வைத்த 5 மில்லியன் யூரோ (ரூ.39 கோடி) மதிப்பிலான அவருடைய சொகுசு கப்பலை விற்க உத்தரவிட வேண்டும் என்றும்அந்த வங்கி லண்டன் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.
‘லு கிராண்ட் ஜார்டின்’ என்ற 17 படுக்கை அறைகள், தியேட்டர், ஹெலிபேட் என பிரம்மாண்டமான அரண்மனைப் பங்களாவை2008-ம் ஆண்டு கத்தார் நேஷனல் வங்கியின் கிளையில் இருந்து 30 மில்லியன் டாலர் (ரூ.210 கோடி)கடன் பெற்று வாங்கினார் விஜய்மல்லையா. ஆனால், அந்தக் கடனை அவர் முறையாக செலுத்தவில்லை. இந்நிலையில் அந்தவங்கி, கடனை மீட்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கிஉள்ளது.
அவருக்கு வழங்கிய கடன் தொடர்பாக, அந்த பங்களாவை ஆய்வு செய்த நிலையில், அதுசரி செய்ய முடியாத அளவில் கடும்சேதம் அடைந்து இருப்பது தெரியவந்துள்ளது. கிட்டத்தட்ட அதன் மதிப்பு 10 மில்லியன் யூரோ (ரூ.79 கோடி) அளவில் சரிந்துள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது. இந்நிலையில் அவருக்குச் சொந்தமான 5 மில்லியன் யூரோ மதிப்பிலான சொகுசு கப்பலை விற்க உத்தரவிட கேட்டுக் கொண்டுள்ளது. அந்த சொகுசு கப்பல் 2018-ம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கிங் பிஷர் நிறுவனத்தின் நிறுவனரான விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் கடன் பெற்று, முறையாக திருப்பி செலுத்தாமல் மோசடி செய்துள்ளார். இந்தியாவில் ரூ.9,000 கோடி அளவில் நிதி மோசடி செய்திருப்பதாக அமலாக்கத் துறை அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்தியாவிலிருந்து தப்பி இங்கிலாந்து சென்ற அவர், 2017 ஏப்ரலில் லண்டனில் கைது செய்யப்பட்டார்.