

ஊழல் புகாரில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஏர் ஏசியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டோனி பெர்னாண்டஸை, வழக்கு விசாரணை தொடர்பாக நேரில் ஆஜராக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
மலேசியாவைத் தலைமையிடமாகக் கொண்ட ஏர் ஏசியா நிறுவனம், டாடா சன்ஸ் நிறுவனத்துடன் கூட்டமைப்பு வைத்து இந்தியாவில் அதன் சேவையை 2014-ம் ஆண்டு தொடங்கியது. இந்நிலையில் இந்தியாவில் உள்நாட்டு சேவைகள் தவிர்த்து, வெளிநாட்டுசேவைகளுக்கான உரிமம் பெறுவதற்காக ஏர் ஏசியா அதிகாரிகள் லஞ்சம் தர முயற்சித்ததாக குற்றம்சாட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து 2018-ம் ஆண்டில் மத்திய புலானாய்வுத் துறை மற்றும் அமலாக்கத் துறை இந்நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்தன. ஏர் ஆசியா நிறுவனத்தின் சிஇஓ டோனி பெர்னாண்டஸ், முன்னாள் அதிகாரி லிங்கம், இந்தியப் பிரிவின் இயக்குநர் ஆர்.வெங்கடராமன் ஆகியோர் மீதும், ஏர் ஏசியாவின் மலேசிய மற்றும் இந்திய நிறுவனங்களின் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பணமோசடி தடுப்புச் சட்டம்மற்றும் அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த அமலாக்கத் துறை, அவ்வழக்குகளின் விசாரணைத் தொடர்பாக ஏர் ஏசியாவின் சிஇஓ டோனி பெர்னாண்டஸ் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளை ஜனவரி 20 அன்று நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட சைரஸ் மிஸ்திரிதான் முதலில்,ஏர் ஏசியா நிறுவனம் முறைகேடுகளில் ஈட்டுப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டினார். அதைத் தொடர்ந்தேஇந்த வழக்கு விசாரணை துரிதப்படுத்தப்பட்டது. உரிமம் வழங்குவது தொடர்பான முறைகேடுகள் 2013-2016 ஆண்டுகளில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.