

பணவீக்க உயர்வு பற்றி எதிர்க்கட்சித் தலைவர்களை அழைத்து பிரதமர் மோடி விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
டிசம்பர் மாதத்தில் வெங்காயம், உருளைக் கிழங்கு போன்ற காய்கள் விலை கடுமையாக உயர்ந்ததால் சில்லறை பணவீக்கம் உயர்ந்துள்ளது. மேலும் பருப்பு வகைகள் 15 சதவீதம் விலை உயர்ந்துள்ளன.
உணவு விலைகள் கணிசமாக உயர்ந்து, தொலைத் தொடர்பு கட்டண உயர்வு ஏற்பட்டதைத் தொடர்ந்து, சில்லறை பணவீக்கம் நவம்பர் மாதத்தில் 5.54 சதவீதத்திலிருந்து டிசம்பர் மாதத்தில் 7.35 சதவீதமாக உயர்ந்துள்ளது.
சில்லறை பணவீக்கம் அதிகாரப்பூர்வமாக நுகர்வோர் விலைக் குறியீடு என்று அழைக்கப்படுகிறது. இது ரிசர்வ் வங்கியின் அளவான 6 சதவீதத்தை தாண்டி உள்ளது.
இந்தநிலையில் இதுகுறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது:
‘‘நாடு மிக மோசமான பொருளாதார சூழலை எதிர் கொண்டு வருகிறது. மத்திய அரசின் தவறான கொள்கைகளால் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது. பணவீக்கம் உயர்ந்து வருகிறது.
ஆனால் இதை பற்றி கவலைப்படாமல் மதரீதியில் மக்களை பிளவுபடுத்தும் வேலையை மத்திய அரசு செய்து வருகிறது. விலைவாசி உயர்வால் மக்கள் கடும் அவதியை சந்தித்து வருகின்றனர். பணவீக்க உயர்வு பற்றி எதிர்க்கட்சித் தலைவர்களை அழைத்து பிரதமர் மோடி விவாதிக்க வேண்டும். மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கை குறித்து விளக்க வேண்டும்’’ எனக் கூறினார்.