

பாம்பே டையிங் நிறுவனத் தலைவர் நுஸ்லி வாடியா, தொழிலதிபர் ரத்தன் டாடா மீது தொடர்ந்தஅனைத்து அவதூறு வழக்குகளையும் திரும்பப் பெறுவதாக தெரிவித்துள்ளார். இதில் ரூ.3 ஆயிரம்கோடி நஷ்ட ஈடு கோரி ரத்தன்டாடா மற்றும் சிலர் மீது தொடரப்பட்ட வழக்கும் அடங்கும்.
உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இந்தியாவின் இருபெரும் தொழிலதிபர்களும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவது சரியான முன்னுதாராணமாக இருக்காது என்றும், இருபெரும் தொழிலதிபர்களும் நீதிமன்றத்துக்கு வெளியே இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து அவதூறு வழக்கை திரும்பப் பெறும் மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அவரும் வழக்கை திரும்பப் பெற வாடியாவுக்கு அனுமதி அளித்தார். நுஸ்லி வாடியா மீது அவதூறு செய்யும் நோக்கம் எதுவும் டாடா உள்ளிட்ட எவருக்கும் இல்லை என்பது நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது.
நுஸ்லி வாடியா தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.ஏ. சுந்தரம் ஆஜரானார். தொழிலதிபர் வாடியா, நீதிமன்றத்தின் கருத்தை ஏற்று வழக்கை திரும்பப் பெற்றதற்கு நீதிபதி பாராட்டு தெரிவித்தார்.
2016-ம் ஆண்டு டாடா குழுமநிறுவனங்களின் இயக்குநர் குழுவிலிருந்து சைரஸ் மிஸ்திரியை வெளியேற்றுவதற்காக வாக்களித்தது தொடர்பாக ரத்தன் டாடா உள்ளிட்ட சில இயக்குநர்கள் மீது வாடியா வழக்குதொடர்ந்திருந்தார். கீழ்நிலை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கு அடுத்தடுத்த நீதிமன்றங்களில் மேல்முறையீட்டுக்கு போனது.
2018-ம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்றம் ரத்தன் டாடாமற்றும் தற்போதைய தலைவர்என்.சந்திரசேகரன் உள்ளிட்ட 8 இயக்குநர்கள் மீது வழக்குதொடர அனுமதி அளிக்கப்பட்டது. குற்றவியல் நடவடிக்கை எடுப்பதை தடுக்க தடை விதிக்குமாறு இவர்கள் மேல்முறையீடு செய்திருந்தனர்.
2016-ம் ஆண்டு டாடா சன்ஸ் இயக்குநர் குழுவிலிருந்தும் தலைவர் பதவியிலிருந்தும் சைரஸ் மிஸ்திரி வெளியேற்றப்பட்டவுடன் தன் மீது ரத்தன் டாடா உள்ளிட்ட இயக்குநர்கள் அவதூறான அறிக்கைகளை வெளியிட்டதாக நுஸ்லி வாடியா வழக்கு தொடர்ந்திருந்தார்.