

அந்நிய செலவாணி மோசடியில் தொடர்பு இருப்பதாக எடில்வைஸ் நிறுவனத்தின் நிறுவனரும் தலைவருமான ராஷேஷ் ஷாவை நேரில் ஆஜர் ஆகும்படி மத்திய அம லாக்கத் துறை சம்மன் அனுப்பி உள்ளது.
ரூ.2,000 கோடி அளவிலான அந்நிய செலாவணி மோசடியில், மும்பையைச் சேர்ந்த கேப்ஸ்டோன் நிறுவனத்துக்கும் ராஷேஷ் ஷாவுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்த விசாரணையில் அமலாக்கத் துறை இறங்கியுள்ளது. ஏற்கெனவே ஜனவரி 3-ம் தேதி அமலாக்கத்துறை, இவ்வழக்குத் தொடர்பாக உரிய விவரங்கள் அளிக்க ராஷேஷ் ஷாவை ஜனவரி 9 அன்று நேரில் ஆஜராக உத்தரவிட்டு இருந்தது. அன்று அவர் நேரில் ஆஜராகாத நிலை யில், அமலாக்கத் துறை அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது. அதில் அவரை நாளை ஆஜராக வேண்டும் என்று உத்தவிட்டுள்ளது.
அவருடைய நிறுவனங்கள் தொடர்பான கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும் என்றுஅமலாக்கத் துறை கேட்டுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மும்பையைச் சேர்ந்த கேப்ஸ்டோன் நிறுவனம் மீது அந்நிய செலாவணி மோசடி தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
2016-17-ம் ஆண்டில் கேப்ஸ் டோன் நிறுவனத்தின் வருவாய் ரூ.16.69 கோடியாக இருந்த நிலையில், அடுத்த நிதி ஆண்டில், அதாவது 2017-18-ல் அதன் வருவாய் ரூ.314.41 கோடியாக உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
எடில்வைஸ் குழும நிறுவனங்களின் சுயாதீன இயக்குநர்களில் ஒருவரான சஞ்சய் நத்தலால் ஷாவுக்கும், கேப்ஸ்டோன் நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், அத்தொடர்பின் மூலம் அவர் வெவ்வேறு நிறுவனக் கணக்குகள் வழியாக பல கோடிமதிப்பில் அந்நியப் பரிவர்த்தனை யில் ஈடுபட்டதாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
அது தொடர்பான விவரங்கள் ஏற்கெனவே சஞ்சய் நத்தலால் ஷாவிடம் கோரப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்தப் பரிவர்த்தனையில் எடில்வைஸ் தலைவர் ராஷேஷ் ஷாவுக்கு தொடர்பு இருக் கக்கூடும் என்ற நோக்கில் ராஷேஷ் ஷாவை நேரில் ஆஜராக அம லாக்கத் துறை உத்தரவிட்டுஉள்ளது.
இதுகுறித்து எடில்வைஸ் நிறு வனம் கூறுகையில், ‘எடில் வைஸ் குழுமம் கேப்ஸ்டோன் நிறுவனத் துடன் பரிவர்த்தனையில் ஈடுபட்டி ருப்பதாகவும் அது தொடர்பாக விசா ரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
எங்கள் குழும நிறுவனத்துக்கும் கேப்ஸ்டோன் நிறுவனத்துக்கும் இடையே எந்தப் பரிவர்த்தனையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்தக் குற்றச்சாட்டு ஆதாரமற்றது’ என்று தெரிவித்தது. இந்நிலையில் நேற்றைய வர்த்தக முடிவில் எடில்வைஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 10 சதவீதம் அளவில் சரிந்து ரூ.105.45க்கு வர்த்தகமானது.