டாடா நிறுவனத்தில் மீண்டும் மிஸ்திரி: உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை

டாடா நிறுவனத்தில் மீண்டும் மிஸ்திரி: உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை
Updated on
1 min read

டாடா சன்ஸ் செயல் தலைவராக மீண்டும் சைரஸ் மிஸ்திரி தொடர வேண்டும் என அறிவித்த தேசிய கம்பெனிகள் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

1965-ம் ஆண்டு சைரஸ் மிஸ்திரியின் தந்தை பலோன்ஜி மிஸ்திரி டாடா சன்ஸ் பங்குகளை வாங்கினார். 1980 ஆம் ஆண்டு அவர் டாடா சன்ஸ் இயக்குநராக நியமிக்கப்பட்டார். 2004-ம் ஆண்டு அவர் பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றார். 2004-ம் ஆண்டு சைரஸ் மிஸ்திரி, டாடா சன்ஸ் குழுமத்தில் சேர்ந்தார். 2012-ம் ஆண்டில் அவர் டாடா சன்ஸ் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார்.

டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் 24-ம் தேதி செயல் தலைவர் பொறுப்பிலிருந்து சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டார். இதையடுத்து தற்போது டாடா சன்ஸ் இயக்குநர் குழுவின் இயக்குநர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.

பதவி நீக்கத்திற்குப் பிறகு டாடா குழுமத்திற்கு எதிராக சைரஸ் மிஸ்திரி மும்பை உயர் நீதிமன்றத்திலும், தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்திலும் 2016-ம் ஆண்டு மனுத்தாக்கல் செய்தார். அந்த வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, தேசிய கம்பெனிகள் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மிஸ்திரி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் டாடா சன்ஸ் நிறுவனத்தில் அதிக பங்குகளை தங்கள் குடும்பம் வைத்துள்ள நிலையில் தன்னை நீக்கியது செல்லாது என அவர் கூறியிருந்தார்.

கம்பெனிகள் சட்டப்படி தன்னை பதவி நீக்கவில்லை என்று மிஸ்திரி குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில் சந்திரசேகரனின் நியமனம் சட்டவிரோதம் என்று தீர்ப்பளித்த தீர்ப்பாயம், சைரஸ் மிஸ்திரியை மீண்டும் செயல் தலைவர் பதவியில் மீண்டும் அமர்த்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை எதிர்த்து டாடா நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி பாப்டே மற்றும் நீதிபதிகள் கவாய், சூரிய காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் அடிப்படை தவறுகள் இருப்பதை உணர முடிவதாக கூறிய நீதிபதிகள் வழக்கை விரிவாக விசாரிக்க விரும்புவதாக தெரிவித்தனர். அதுவரை தேசிய கம்பெனிகள் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதிப்பதாகவும் தெரிவித்தனர். வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in