ஈரான் தாக்குதலால் பங்குச்சந்தைகள் கடும் சரிவு

ஈரான் தாக்குதலால் பங்குச்சந்தைகள் கடும் சரிவு
Updated on
1 min read

இராக்கில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் மீது ஈரான் ராணுவம் இன்று அதிகாலை நடத்திய ஏவுகணைத் தாக்குதலை தொடர்ந்து பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்தன.

அமெரிக்கா - ஈரான் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது. இதனால், பங்குச் சந்தை, தொழில் துறை போன்றவற்றை தவிர்த்துவிட்டு, தங்கத்தில் முதலீட்டாளர்கள் அதிக அளவில் முதலீடு செய்கின்றனர். இதன் காரணமாக பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன.

இந்திய பங்குச்சந்தைகள் நேற்று முன்தினம் பெரும் சரிவை சந்தித்தன. மும்பை பங்குச்சந்தையில் பங்குகளின் மதிப்பு 3 மணிநேரத்தில் 3 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சரிந்து முதலீட்டாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது.

எனினும் பெரும் தொடர் சரிவுக்கு பின் பங்குச்சந்தைகள் நேற்று சற்று ஏற்றம் கண்டன. இந்தநிலையில் ஈராக்கில் பாக்தாத் அருகே இருக்கும் 'அன் அல் ஆசாத்' மற்றும் 'ஹாரிர் கேம்ப்' ஆகிய விமான தளங்களைக் குறிவைத்து ஈரானின் ராணுவம் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியது.

இந்த ஏவுகணைத் தாக்குதலில் 80 அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. இதனால் மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் தொற்றியுள்ளது.

இதன் எதிரொலியாக டோக்கியோ, ஹாங்காங் உட்பட பல பங்குச்சந்தைகளிலும் சரிவு ஏற்பட்டது. இந்த பங்குச்சந்தைகளும் பின்னடைவை சந்தித்தன.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 378 புள்ளி சரிந்து 40,491 புள்ளிகளாகவும் தேசிய பங்குச்சந்தை குறியீடு நிப்டி 123 புள்ளிகள் குறைந்து 11,929 புள்ளிகளாகவும் வீழ்ச்சியடைந்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in