

ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் மீது ஈரான் ராணுவம் இன்று அதிகாலை நடத்திய ஏவுகணைத் தாக்குதலை தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
அமெரிக்க அரசு, ஈரானின் முக்கிய தளபதிகளில் ஒருவரான காசிம் சுலைமானியை ஏவுகனை தாக்குதல் நடத்திக் கொன்றது. அதைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே பதற்றச் சூழல் அதிகரித்துள்ளது. தாக்குதல் நடத்தப்பட்ட அன்றைய தினமே உலகளாவிய பொருளாதார சந்தையில் மாற்றம் ஏற்பட்டது.
உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் மத்திய கிழக்குப் பகுதிகளில் இருந்தே பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுவதால், கச்சா எண்ணெய் மதிப்பு அன்றைய தினம் 4 சதவீதம் அளவில் உயர்வைக் கண்டது. அதேபோல் தங்கத்தின் மதிப்பும் அதிகரித்தது.
பதற்றம் சற்று தணிந்ததால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நேற்று சற்று குறைந்தது. இந்தநிலையில் ஈராக்கில் பாக்தாத் அருகே இருக்கும் 'அன் அல் ஆசாத்' மற்றும் 'ஹாரிர் கேம்ப்' ஆகிய விமான தளங்களைக் குறிவைத்து ஈரானின் ராணுவம் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியது.
இந்த ஏவுகணைத் தாக்குதலில் 80 அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. இதனால் மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் தொற்றியுள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை மீண்டும் ஏறுமுகமாக உள்ளது. பெய்ரூட் கச்சா எண்ணெய் சந்தையில் பீப்பாய் கச்சா எண்ணெய் 68.09 டாலரில் இருந்து 67.86 டாலராக குறைந்துள்ளது. அதாவது வெறும் 82 சென்ட் என்ற அளவில் விலை குறைந்துள்ளது.
எனினும் இந்திய சந்தையில் பெட்ரோல், டீசல் விலை இன்று உயர்ந்தே காணப்படுகிறது. சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 5 காசு அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.78.69 ஆக உயர்ந்துள்ளது.
டீசல் நேற்றைய விலையில் இருந்து 11 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் ரூ.72.69 ஆகவும் உள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை சற்று உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
லண்டன் கச்சா எண்ணெய் சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 3 டாலர்கள் வரை உயர்ந்துள்ளது. பெய்ரூட் சந்தையில் 73 சென்ட்டுகள் உயர்ந்து 69.02 டாலர்களாக விலை அதிகரித்துள்ளது. அதுபோலவே அமெரிக்க கச்சா எண்ணெய் சந்தையில் 61 சென்ட்டுகள் அளவுக்கு விலை உயர்ந்து ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 63.31 டாலர்களாக உள்ளன.