Published : 07 Jan 2020 11:27 AM
Last Updated : 07 Jan 2020 11:27 AM

ஒரு நானோ கார் மட்டுமே 2019-ம் ஆண்டில் விற்பனை

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டில் (2019) ஒரு நானோ காரை கூட உற்பத்தி செய்யவில்லை. பிப்ரவரி மாதம் ஒரே ஒரு கார் மட்டுமே விற்பனையானதாக தெரிவித்துள்ளது.

ரத்தன் டாடா-வின் கனவு திட்டத்தில் உருவானதுதான் நானோ கார். குறைந்த விலையில் கார் தயாரிக்கும் நோக்கில் இத்திட்டம் வகுக்கப்பட்டது. தொடக்கத்தில் இதற்காக மேற்கு வங்க மாநிலம் சிங்குரில் இடம் பெறப்பட்டு, ஆலை அமைக்கும் பணிகள் நடைபெற்றன. கட்டுமான பணிகள் 75 சதவீதம் முடிவடைந்த நிலையில் அங்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் கடும் எதிர்ப்பால் இத்திட்டம் அங்கு கைவிடப்பட்டது. இதற்குப் பதிலாக குஜராத் மாநிலத்தில் புதிதாக ஆலை அமைக்கப்பட்டு நானோ கார்கள் உற்பத்தி செய்யப்பட்டன.

ஆனால், இந்த காருக்கு ஆரம்பத்தில் இருந்த வரவேற்பு இதன் செயல்பாடுகளால் தொடர்ந்து சரியத் தொடங்கியது. குறைந்த விலை கார் என்பதாலேயே இந்த காரை பலரும் வாங்க தயங்கினர். ஆரம்பத்தில் ரூ.1 லட்சத்துக்கு தரப்பட்ட இந்த கார் பிறகு படிப்படியாக விலை உயர்த்தப்பட்டது. கடைசியாக இதன் விலை ரூ.2.26 லட்சம் முதல் ரூ. 3.20 லட்சம் வரை இருந்தது. பல்வேறு மாறுதல்கள் செய்யப்பட்ட போதிலும் இதன் சந்தை வாய்ப்பு தொடர்ந்து சரிவைச் சந்தித்தது. ஒருகட்டத்தில் இந்த கார் உற்பத்தியை நிறுத்த முடிவு செய்யப்பட்டது.

இந்த யோசனையை முதலில் தெரிவித்த சைரஸ் மிஸ்திரிக்கும், ரத்தன் டாடாவுக்கும் இதனால் உரசல் ஏற்பட்டது. மிஸ்திரியை தலைவர் பதவியிலிருந்து தூக்கியெறிவதற்கான காரணங்களுள் இதுவும் ஒன்றாக இருந்தது. ஆனால் காலப்போக்கில் யதார்த்த சூழலை டாடா மோட்டார்ஸ் ஏற்க வேண்டிய கட்டாயம் உருவானது. படிப்படியாக குறைக்கப்பட்ட உற்பத்தி கடந்த ஆண்டில் முற்றிலுமாக நின்று போனது. 2018-ம் ஆண்டில் மொத்தம் 88 கார்கள் தயாரிக்கப்பட்டு அதில் 82 கார்கள் விற்பனை செய்யப்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

2019 நவம்பரில் நானோ கார் உற்பத்தி செய்யப்படவில்லை. ஆனால் 2018-ம் ஆண்டு நவம்பரில் 66 கார்கள் உற்பத்தி செய்யப்பட்டது. அந்த ஆண்டில் விற்பனையானது 77 கார்களாகும். 2019 அக்டோபரிலும் நானோ உற்பத்தி செய்யப்படவில்லை. ஆனால் 2018 அக்டோபரில் 71 கார்கள் தயாரிக்கப்பட்டதில் 54 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் பிப்ரவரி மாதத்தில் மட்டும் ஒரே ஒரு கார் விற்பனையானது. அது தவிர பிற மாதங்களில் நானோ கார் விற்பனையாகவில்லை என பங்குச் சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில் டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
நானோ கார் உற்பத்தி நிறுத்தம் குறித்து எவ்வித முடிவையும் டாடா மோட்டார்ஸ் வெளியிடவில்லை. தேவைக்கேற்ப இதை தயாரிப்பது நிறுவன உத்திகளில் ஒன்றாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போதைய நிலையில் நானோ கார்பாரத் புகை விதி 6-ஐ பூர்த்தி செய்யவில்லை. மேலும் பாதுகாப்பு விதிகளையும் அது பூர்த்தி செய்யவில்லை. 2008-ம் ஆண்டு ஆட்டோ மொபைல் கண்காட்சியில் மக்கள் காராக அறிமுகப்படுத்தப்பட்ட நானோ கார் 11 ஆண்டுகளுக்குள்ளாகவே மூடு விழா காணும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. எப்படியிருப்பினும் ஏப்ரல் 2020-க்குப் பிறகு நானோ உற்பத்தி இருக்காது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x