Published : 07 Jan 2020 11:20 AM
Last Updated : 07 Jan 2020 11:20 AM

அமெரிக்கா – ஈரான் போர் பதற்ற எதிரொலி: பங்குச் சந்தையில் ஒரே நாளில் ரூ.3 லட்சம் கோடி இழப்பு - தங்கம் விலை கடும் உயர்வு

அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் பதற்றம் காரணமாக பங்குச்சந்தையில் கடுமையான சரிவு காணப்பட்டது. பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவால் முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.3 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. பலரும் இப்படி ஒரு இழப்பை இதற்கு முன் சந்தித்ததே இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்த வெள்ளியன்று ரூ.157 லட்சம் கோடியாக இருந்த பிஎஸ்இ பங்குகளின் மதிப்பு திங்களன்று ரூ.3 லட்சம் கோடி குறைந்து ரூ.154 லட்சம் கோடியானது. வாரத்தின் தொடக்க நாளான நேற்று மும்பை பங்குச் சந்தையில் 787 புள்ளிகள் சரிந்து குறியீட்டெண் 40,676 புள்ளிகளானது. இதேபோல தேசிய பங்குச் சந்தையில் 233 புள்ளிகள் சரிந்ததில் குறியீட்டெண் 12 ஆயிரத்துக்கும் கீழாக குறைந்து 11,993 ஆனது. பஜாஜ் பைனான்ஸ் (5%) கடுமையான சரிவைச் சந்தித்தது. இதையடுத்து எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி, இன்டஸ்இந்த் வங்கி, மாருதி, ஏசியன் பெயின்ட்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், ஐசிஐசிஐவங்கி, ஆக்ஸிஸ் வங்கி பங்குகளும் சரிவைச் சந்தித்தன.

கச்சா எண்ணெய் உயர்வு

டைட்டன், டிசிஎஸ் பங்குகள் மட்டும் சரிவிலிருந்து தப்பின. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், பதிலடி தருவோம் என ஈரானை எச்சரித்தது சர்வதேச பங்குச் சந்தைகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் பங்குகள் விற்பனை அதிகரித்ததோடு விலையும் பெருமளவு சரிந்தன. இராக்கின் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்ற எச்சரிக்கையும் கடுமையான அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 3 சதவீதம் உயர்ந்து பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 70.59 டாலர் என்ற அளவில் வர்த்தகமானது.

ஆசிய பிராந்தியத்தில் ஹாங்காங், ஷாங்காய், டோக்கியோ, சியோல் ஆகிய நாடுகளின் பங்குச் சந்தைகளும் 2 சதவீத அளவுக்கு சரிவை சந்தித்தன. டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பும் 30 காசுகள் சரிந்து ரூ. 72.10 என்ற அளவில் வர்த்தகமானது. தங்கத்தின் விலை கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்தது. இதேபோல ஆட்டோமொபைல் துறையில் அதிகம் பயன்படுத்தப்படும் பல்லாடியம் உலோகத்தின் விலை அதிகபட்சமாக 2 ஆயிரம் டாலர் விலையைத் தொட்டது. தங்கத்தின் விலை 1.7 சதவீதம் உயர்ந்தது. ஒரு அவுன்ஸ் (28.34 கிராம்) தங்கத்தின் விலை 1,577.98 டாலராக உயர்ந்தது. முன் தேதியிட்டு தங்கம் வாங்குவதில் ஒரு அவுன்ஸின் விலை 1.8 சதவீதம் உயர்ந்து 1.580.30 டாலர் என்ற அளவில் வர்த்தகமானது.

சர்வதேச அரசியல் சூழல் இப்போது முக்கிய இடம்பிடித்துள்ளது. அமெரிக்கா – ஈரான் இடையிலான மோதல் இப்போது உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்ததாக பிலிப் பியூச்சர்ஸ் நிறுவனத்தின் பகுப்பாளர் பெஞ்சமின் லூ தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இராக் மீது சர்வதேச தடை விதிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார். ஈரானின் ராணுவ தளபதி கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாக்தாத்திலிருந்து அமெரிக்கர்களும், அமெரிக்க ராணுவமும் வெளியேற வேண்டும் என்று இராக் கூறியுள்ளது. இதனிடையே யுரேனியத்தை செறிவூட்டும் அளவை குறைப்பது என்று 2015-ம் ஆண்டு 6 நாடுகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை கைவிடப்போவதாக ஈரான் அறிவித்திருப்பது பிரச்சினையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

இதனால் பெரும்பாலான நாடுகளில் பங்குச் சந்தை கடும் சரிவைச் சந்தித்துள்ளது. தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 1,600 டாலர் என்ற அளவை எட்டும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். பல்லாடியமும் ஒரு அவுன்ஸ் விலை 2,020 ஆக உயர்ந்தது. இது 1.5 சதவீத உயர்வாகும். இதேபோல வெள்ளியின் விலை 2.2 சதவீதம் உயர்ந்து ஒரு அவுன்ஸ் 18.45 டாலர் என்ற அளவைத் தொட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x