

இந்திய பங்குச்சந்தைகள் பெரும் இழப்புக்கு பின் இன்று சற்று உயர்வு கண்டுள்ளன.
அமெரிக்கா - ஈரான் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது. இதனால், பங்குச் சந்தை, தொழில் துறை போன்றவற்றை தவிர்த்துவிட்டு, தங்கத்தில் முதலீட்டாளர்கள் அதிக அளவில் முதலீடு செய்கின்றனர். இதன் காரணமாக பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்து வருகின்றன.
இந்திய பங்குச்சந்தைகள் நேற்று பெரும் சரிவை சந்தித்தன. மும்பை பங்குச்சந்தையில் பங்குகளின் மதிப்பு 3 மணிநேரத்தில் 3 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சரிந்து முதலீட்டாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது.
வர்த்தக முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 787.98 புள்ளி சரிந்து 40,676.63 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடு நிப்டி 233.60 புள்ளிகள் சரிந்து 11,993.05 ஆகவும் இருந்தது.
பங்குகள் மதிப்பு 2 கோடியே 97 லட்சத்து 45 ஆயிரத்து 8.05 ரூபாய் அளவுக்கு சரிந்தது. தொடர்ந்து 2 நாளில் முதலீட்டாளர்கள் 3.36 லட்சம் கோடி இழந்துள்ளனர். கடந்த 6 மாதத்தில் இல்லாத பெரும் சரிவாகும்.
இந்தநிலையில் பெரும் தொடர் சரிவுக்கு பின் பங்குச்சந்தைகள் இன்று சற்று ஏற்றம் கண்டுள்ளன. சென்செக்ஸ் 388 புள்ளி அதிகரித்து 41,065 புள்ளிகளாகவும் தேசிய பங்குச்சந்தை குறியீடு நிப்டி 129 புள்ளிகள் உயர்ந்து 12,122 புள்ளிகளாகவும் உள்ளன.