

பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் சொத்துகளை விற்று நிதி திரட்டும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளது. அதன்பகுதியாக ரூ.20,160 கோடி மதிப்புள்ள சொத்துகள் தொடர்பான விவரங்களை முதலீட்டு மற்றும் சொத்து மேலாண்மைத் துறையிடம் சமர்பித்துள்ளது.
கடும் நஷ்டத்தில் இயங்கிவந்த அரசு தொலைதொடர்பு நிறுவனங்களான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல்-ஐ மீட்டெடுக்கும் பொருட்டு, இரு நிறுவனங்களையும் ஒன்றாக இணைக்கும் திட்டத்துக்கு கடந்த ஆண்டு ஒப்புதல் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் சீரமைப்பு செயல்பாடுகளுக்காக ரூ.69,000 கோடி நிதிஒதுக்கப்பட்டது.
அதில் 4 ஜி அலைக்கற்றைக்காக ரூ.20,140 கோடியும், அதற்கான ஜிஎஸ்டிக்காக ரூ.3,674கோடியும், விருப்ப ஓய்வுத் திட்டத்துக்காக ரூ.17,160 கோடியும் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் நிறுவனச் செயல்பாட்டுக்காக நிதி திரட்டும் வகையில், சொத்துகளை விற்கும் நடவடிக்கையில் பிஎஸ்என்எல் இறங்கியுள்ளது. ‘தற்போது ரூ.20,000 கோடிக்குமேல் மதிப்புள்ள சொத்துகளை அடையாளம் கண்டு அது தொடர்பான தகவல்களை முதலீடு மற்றும் சொத்து மேலாண்மைத் துறையிடம் சமர்ப்பித்துள்ளோம்’ என்று பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பி.கே.புர்வார் தெரிவித்துள்ளார்.
மும்பை, திருவனந்தபுரம், சென்னை, காஷியாபாத் ஆகிய நகரங்களிலுள்ள குறிப்பிட்ட சொத்துகளும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக அவர் தெரிவித்தார். அடுத்த நான்கு வருடத்தில் கடன் பத்திரங்கள் மூலம் ரூ.15,000 கோடியும், நிலங்களை விற்பதன் மூலம் ரூ.38,000கோடியும் நிதி திரட்ட பிஎஸ்என்எல் திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.