

இந்திய ரயில்வே துறையில் ரயில் சேவைகளை தனியாருக்கு விடுவதற்கான ஆலோசனையை நிதி ஆயோக் அளித்துள்ளது. தனியாருக்கு விடுவதன் மூலம் ரூ.22,500 கோடி அளவுக்கு முதலீடுகள் ரயில்வே துறைக்கு வரும் என்றும் 100 மார்க்கங்களில் 150 ரயில் சேவையை நடத்தலாம் என்றும் ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
பயணிகள் ரயில் சேவையில் தனியார் பங்களிப்பு என்ற ஆய்வு கடிதத்தை ரயில்வே துறைக்கு நிதி ஆயோக் அனுப்பியுள்ளது. பயணிகள் அடர்வு அதிகம் உள்ள 100 மார்க்கங்கள் இதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன.
மும்பை சென்ட்ரல் – புதுடெல்லி, புதுடெல்லி – பாட்னா, அலாகாபாத் – புணே, தாதர் – வதோதரா ஆகிய மார்க்கங்கள் முக்கியமானவையாகும். இவை தவிர ஹவுரா – சென்னை, ஹவுரா - பாட்னா, இந்தோர்-ஆக்லா, லக்னோ – ஜம்முதாவி, சென்னை – ஆக்லா, ஆனந்த் விகார் – பாகல்பூர், செகந்திராபாத் – குவஹாட்டி, ஹவுரா – ஆனந்த் விகார் ஆகிய மார்க்கங்களும் இதில் அடங்கும். இதில் குறிப்பிடப்பட்டுள்ள மார்க்கங்களில் தனியார் ரயில் சேவையை ஈடுபடுத்துவது தொடர்பாக, 100 மார்க்கங்கள் அடையாளம் காணப்பட்டு அவை 10 முதல் 12 தொகுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
ரயில் சேவையில் தனியார் ஈடுபடுத்தப்படும் பட்சத்தில் சந்தை நிலவரத்துக்கேற்ப பயணிகள் கட்டணத்தை நிர்ணயித்தக் கொள்ளலாம். அதேபோல ரயில் பெட்டிகளில் பயணிகளின் அடர்வு மற்றும் முன்பதிவுக்கேற்ப மாற்றங்கள் செய்து கொள்ளலாம். மேலும் எந்தெந்த ரயில் நிலையங்களில் நின்று செல்வது என்பதையும் நிறுவனங்
களே திட்டமிட்டு முடிவு செய்துகொள்ளலாம். பயணிகள் ரயில் சேவையில் தனியாரை ஈடுபடுத்துவதன் மூலம் நவீன தொழில்நுட்பங்களை புகுத்த முடியும். பயணிகளுக்கு கூடுதல் சவுகர்யமும் கிடைக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பயணிகள் அடர்வு உள்ள பகுதியில் கூடுதல் ரயில் சேவைகளை இயக்கவும் இது வழி வகுக்கும்.‘ரயில் சேவையில் உள்நாட்டு நிறுவனங்கள் மட்டுமின்றி வெளிநாட்டு நிறுவனங்கள் ஈடுபட முன்வரும்பட்சத்தில் அவற்றையும் அனுமதிக்கலாம்’ என்று நிதி ஆயோக் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் ஒரு நிறுவனத்துக்கு குறைந்தபட்சம் 3 தொகுப்பு களையாவது அனுமதிக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை லக்னோ – டெல்லி மார்க்கத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த மார்க்கத்தில் ரயில் சேவையை ஐஆர்சிடிசி நடத்துகிறது. துணை நிறுவனத்துக்கு ரயில் சேவை விடப்பட்டது இதுவே முதல் முறை.
இதையடுத்து தனியாரையும் பயணிகள் ரயில் சேவையில் ஈடுபடுத்தலாம் என்ற யோசனையை நிதி ஆயோக் முன் வைத்துள்ளது. பயணிகளுக்கு பல்வேறு சலுகைகளை ஐஆர்சிடிசி அளித்து வருகிறது. பயணத்தின்போது சாப்பாடு வசதி, ரூ.25 லட்சம் வரை விபத்து காப்பீடு உள்ளிட்டவற்றோடு, தாமதமானால் இழப்பு உள்ளிட்டவற்றையும் அளிக்கிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ரயில்வே வாரியம் சுதந்திரமான அதிகாரம் பொருந்திய குழுவை உருவாக்கியது. இக்குழுவுக்கு நிதி ஆயோக் சிஇஓ அமிதாப் காந்த் தலைவராக உள்ளார். குழுவின் உறுப்பினராக செயலர்கள் உள்ளனர். இந்த குழுதான் தனியாரை ஈடுபடுத்துவது தொடர்பான விதிமுறைகளை வகுத்து அதை விரைவு படுத்தும் வழிமுறைகளையும் உருவாக்கியுள்ளது.