

இந்தியாவின் தர மதிப்பீடு உயர வேண்டுமானால் நிதிச் சீர்திருத்தங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தரச்சான்று நிறுவனமான மூடி’ஸ் கருத்து தெரிவித்துள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தை நிர் ணயிக்கும் காரணிகளில் ஒன்றான பணவீக்கம் அடுத்த ஆண்டு வரை கட்டுக்குள் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் தர மதிப்பீடு அதாவது கடனை திருப்பி செலுத்தும் திறனுக்கான அளவுகோல் உயர வேண்டுமாயின் மூடி’ஸ் நிறுவனத்தின் எதிர்பார்ப்புக்கேற்ப படிப்படியாக இருக்க வேண்டும். அதேசமயம் கடனை திரும்ப செலுத்தும் திறன் உயர வேண்டுமாயின் அதற்கு நிதிச் சீர்திருத்தம் மிகவும் அவசியமாகும். இதற்கு கொள்கை அளவில் மாற்றங்கள் செய்ய வேண்டும். பணவீக்கம், நடப்பு கணக்குப் பற்றாக்குறை மற்றும் நிதிப் பற்றாக்குறை ஆகியன ஸ்திரமாக கட்டுக்குள் இருக்க வேண்டும் என என்று சுட்டிக் காட்டியுள்ளது.
2004-ம் ஆண்டிலிருந்து இந்தியா குறித்த மதிப்பீடு பிஏஏ3 என்றும் முதலீட்டுக்கு ஏற்ற சூழல் இல்லை என்று மதிப்பிட்டிருந்தது. கடந்த ஆண்டு பிஏஏ3 என்றும் மாற்றத்துக்கான வாய்ப்புள்ள நாடு என்றும் குறிப்பிட்டிருந்தது.
இந்த மதிப்பீடு தரம் உயர்த்தப்பட வேண்டுமாயின், மத்திய அரசின் செயல் திட்டங்கள் மட்டுமின்றி கொள்கை ரீதியிலான மாற்றங்களும் குறிப்பாக நிதி சீர்திருத்தமும் செய்தாக வேண்டும். பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைக்கும்போதுதான் இந்தியாவின் கடனை திருப்பி செலுத்தும் திறன் மேம்படும். கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது, கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி முதலீடுகளை ஈர்ப்பது போன்ற தொடர் நடவடிக்கைகள் மூலமாகத்தான் நிதி நிலை மேம்படும் என்று சுட்டிக் காட்டியுள்ளது.
தர மதிப்பீடானது ஒரே நிலையில் இருப்பதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளன. அதாவது தேக்க நிலை நீடித்தாலோ அல்லது நிதி சீர்திருத்தங்களை மேற்கொள்வதில் மாற்றம் இருந்தாலோ, வங்கியின் வாராக் கடன் அளவு தொடர்ந்து அதிகரித்தாலோ, நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்தாலோ, வெளிநாட்டிடமிருந்து பெறப்பட்ட கடன் அதிகரிப்பு மற்றும் இறக்குமதி அதிகரிப்பு ஆகிய காரணங்களால் மாறுவதற்கு வாய்ப்புள்ளதாக மூடி’ஸ் தெரிவித்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது, நிதிப் பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைத்திருப்பது ஆகியன பொருளாதார வளர்ச்சியை ஒரு நிலையாக வைத்திருக்க உதவும் என்று குறிப்பிட்டுள்ளது.
பிற நாடுகளில் பொருள்களின் விலை குறைவாக இருப்பது இந்தியாவுக்கு சாதகமான அம்சம் என்று குறிப்பிட்டுள்ள மூடி’ஸ், இதன் மூலம் உள்நாட்டில் தேவை அதிகரித்து ஜிடிபி வளர்ச்சிக்கு வழியேற்படும், இதனால் சர்வதேச அளவில் ஒப்பிடுகையில் இந்தியாவின் வளர்ச்சி அதிகமாகவே இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.
நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீத அளவுக்கு இருக்கும் என மூடி’ஸ் மதிப்பிட்டுள்ளது.