

சைரஸ் மிஸ்திரி மீண்டும் தலைவராக தொடரலாம் என மேல் முறையீட்டு தீர்ப்பாயம் அளித்த உத்தரவுக்கு தடை விதிக்குமாறு டாடா சன்ஸ் மனு தாக்கல் செய்துள்ளது. டாடா குழுமத்தில் இயங்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் தாய் நிறுவனமாகத் திகழ்வது டாடா சன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
சைரஸ் மிஸ்திரி பதவியில் தொடரலாம் என அளிக்கப்பட்ட தீர்ப்பானது நிறுவனங்களின் ஜனநாயகம் மற்றும் குழுவின் இயக்குநர்களுக்குள்ள உரிமையை பறிக்கும் செயல் என்று தனது மனுவில் டாடா சன்ஸ் குறிப்பிட்டுள்ளது. அவரது பதவிக்காலம் முடியும் வரை நீடிக்கலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் அவரது பதவிக்காலம் முடிந்துவிட்டநிலையில் இத்தகைய உத்தரவு பெரும் அழிவையே ஏற்படுத்தும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல் முறையீட்டு தீர்ப்பாயம் தனது உத்தரவில் மிஸ்திரியை மீண்டும் பதவியில் தொடர உத்தரவிட்டுள்ளதே தவறானது. இது நிறுவன செயல்பாடுகளில் மிகப் பெரும் குழப்பத்தையே ஏற்படுத்தும். அதிலும் குறிப்பாக பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கு பாதிப்பை உருவாக்கும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விதம் உத்தரவிட்டுள்ளதானது நிறுவன சட்டங்கள் மற்றும் தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் வகுத்த வழிகாட்டுதலுக்கு முரணானது. இத்தகைய உத்தரவு நீதி வரம்புக்குள் எவ்வித நிவாரணத்தையும் மனுதாரருக்கு ஏற்படுத்தாது என்றும் குறிப்பிட்டுள்ளது.
இந்த மனுவை டாடா சன்ஸ் சார்பில் கரன்ஜவாலா அண்ட் கோ என்ற சட்ட நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. எஞ்சியுள்ள பணிக்காலம் வரை அவர் தலைவராக தொடரலாம் என குறிப்பிட்டுள்ளது. ஆனால் அவர் பதவி 2017-ம் ஆண்டு மார்ச் மாதத்திலேயே முடிவடைந்துவிட்டது என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு சைரஸ் மிஸ்திரிக்கு எந்தவித பலனையும் ஏற்படுத்தாது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் இந்த உத்தரவானது முழுமையானதாக அதாவது நிறுவன விதிமுறைகள்படியும், சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டதாகவும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மனுதாரருக்கு நிவாரணம் தர வேண்டும் என்ற நோக்கில் சட்ட விதிமுறைகளை ஆராயாமல் அளிக்கப்பட்ட இத்தீர்ப்பானது சட்ட ரீதியில் மிகப் பெரும் ஆபத்தாகும் என்றும் டாடா சன்ஸ் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் என்சிஎல்டியில் சைரஸ் தாக்கல் செய்த மனுவில் தன்னை மீண்டும் தலைவர் பதவியில் நியமிக்க வேண்டும் என்று எந்த சந்தர்ப்பத்திலும் கோரவில்லை. அவரது பதவிக்காலம் மார்ச் 2017-ல் நிறைவடைந்த நிலையில் அவரை மீண்டும் தலைவராக சேர்ப்பது என்ற பேச்சே எழவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
டாடா சன்ஸ் நிறுவனம் ஒரு பொது நிறுவனமாகும். சட்ட ரீதியாக எந்த மாற்றங்கள் செயல்படுத்தப்பட்டாலும் அது மும்பையில் உள்ள நிறுவன பதிவாளர் பதிவேட்டின்படி சட்ட விரோதமானதாகும் என்றும் குறிப்பிட்டுள்ளது.