

தப்பியோடிய பொருளாதார குற்றவாளியான வைர வியாபாரி நீரவ் மோடியின் காவலை இம்மாதம் 30-ம் தேதி வரை நீட்டித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் முறைகேடாக கடன் பெற்று அதை செலுத்தாமல் நாட்டை விட்டு தப்பியோடினார் நீரவ் மோடி.
இவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 19-ம் தேதி லண்டனில் கைது செய்யப்பட்டு வாண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அமலாக்கத் துறை மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) ஆகியன தீவிரமாக மேற்கொண்டுள்ளன.
இவர் மீதான வழக்கை வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவதற்கான வழக்கு விசாரணை மே 11-ம் தேதி நடைபெற உள்ளது. இது 5 நாட்கள் நடைபெறும் என்று தெரிகிறது.
தன்னை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்ற நீரவ் மோடியின் மனுக்களை நீதிமன்றம் பல முறை நிராகரித்துவிட்டது.
இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெறும் வரை இவரை தொடர்ந்து காவலில் வைக்க குறிப்பிட்ட கால இடைவெளியில் இவர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியிருக்கும் என்றே தெரிகிறது.