

2019 டிசம்பர் 31ம் தேதி வரையில் இந்திய சர்க்கரை உற்பத்தி 77.95 லட்சம் டன்கள், 2014-15 சீசனில் சர்க்கரை உற்பத்தி 74.95 லட்சம் டன்களாக இருந்தது, இதனையடுத்து 5 ஆண்டுகளுக்குப் பிறகு சர்க்கரை உற்பத்தி இந்தியாவில் குறைந்துள்ளது.
2018-19-ம் ஆண்டில் சர்க்கரை உற்பத்தி 111.72 லட்சம் டன்களாக இருந்தது, இதை ஒப்பிடுகையில் தற்போது 30% உற்பத்தி குறைந்துள்ளது.
கடந்த ஆண்டில் 507 சர்க்கரை தொழிற்சாலைகள் இருந்தன, தற்போது 437 சர்க்கரை ஆலைகளாகக் குறைந்துள்ளன. உதாரணமாக விளக்க வேண்டுமெனில் மகாராஷ்ட்ராவில் 137 சர்க்கரை ஆலைகளின் உற்பத்தி டிசம்பர் 31 வரை 16.50 லட்சம் டன்கள், கடந்த ஆண்டில் 187 மில்கள் இருந்தன, இதன் உற்பத்தி கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தில் 44.57 லட்சம் டன்களாக இருந்தன.
வெள்ளத்தினால் கரும்பில் இருக்கும் சுக்ரோஸ் உள்ளடக்கம் குறைந்து போனதும் இதற்கு ஓர் காரணமாகும். மகாராஷ்ட்ரா சர்க்கரை கமிஷனரின் தகவல்களின் படி அகமெட் நகர், அவுரங்கா பாத் ஆகிய ஊர்களில் இருந்த சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகள் இல்லாததால் இழுத்து மூடப்பட்டன. மேலும் கரும்பும் போதிய அளவில் கிடைக்கவில்லை.
உ.பி.யில் 18 முதல் 20 சர்க்கரை உற்பத்தி ஆலைகள் எத்தனால் உற்பத்திக்கு திருப்பி விடப்பட்டன. கர்நாடகாவிலும் வெள்ளம் காரணமாக சர்க்கரை உற்பத்தி குறைந்தது. சுமார் 63 ஆலைகளிலிருந்து 16.3 லட்சம் டன்கள்தான் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
மற்ற மாநிலங்களில் உள்ள பிற சர்க்கரை உற்பத்தி ஆலைகள் சேர்ந்து 12 லட்சம் டன்கள் உற்பத்தி செய்துள்ளன. இதுவரை 25 லட்சம் டன்கள் சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.