Published : 11 Aug 2015 10:52 AM
Last Updated : 11 Aug 2015 10:52 AM

சகோதர தேசத்திலும் வாய்ப்புகள் ஏராளம்

சமீபத்தில் நானும், ஐ.ஐ.எம், அகமதாபாத் கல்லூரித் தோழர்களும் பத்து நாட்கள் பூடான் நாட்டுக்குச் சுற்றுப் பயணம் போயிருந்தோம். அகமதாபாத் எம்.பி.ஏ படிப்பு எங்கள் வாழ்க்கையில் மாபெரும் மாற்றங்கள் ஏற்படுத்தியிருப்பது தெரிந்தது. நிறுவனத் தலைவர்கள், இயக்குநர்கள், தொழில் முனைவர்கள், மேனேஜ்மெண்ட் ஆலோசகர்கள், பிசினஸ் ஸ்கூல் பேராசிரியர்கள், இசை வல்லுநர்கள், எழுத்தாளர்கள்…..அமெரிக்கா, ரஷ்யா, துபாய், இத்தாலி, பிரான்ஸ், இந்தியா என உலகின் பல நாடுகளில் வெற்றிக்கொடி நாட்டும் தோழர்கள். பல ஆண்டுகளுக்குப் பின் சந்திக்கும் நண்பர்கள், பாசப் பிணைப்புகள், பசுமை நிறைந்த ஐஐஎம் நினைவுகள். இவற்றோடு, மிகச் சிறப்பாக உபசரித்த பூடான் நாடு. மொத்தத்தில் அந்தப் பத்து நாட்கள் சுகமான அனுபவங்கள்.

பூகோள அமைப்பு

பூடான் இமய மலையின் தென் கிழக்கில் இருக்கிறது. இந்தியா, நேபாளம், திபெத் ஆகியவை அண்டைநாடுகள். பூடான் ஒரு குட்டி தேசம், பரப்பளவு 38,394 சதுரக் கிலோமீட்டர்கள். அதாவது, சுமாராகத் தமிழ்நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு. ஆனால், மக்கள் தொகை 7,42,000 மட்டுமே. அதாவது, அரியலூர் மாவட்டத்தின் ஜனத்தொகைதான்.

76 சதவீத மக்கள் புத்த மதத்தினர். 22 சதவீதம் இந்துக்கள். மற்றவர்கள் பிற மதத்தினர். ஏராளமான இடங்களில் புத்தர் கோவில்கள். பிரமாண்ட புத்தர் சிலைகளை காணலாம். தலை நகரான திம்பு (Thimphu) அருகே புதியதாகப் புத்தர் கோவில் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். உலகி லேயே அதிக உயரமான 169 அடி புத்தரை இங்கே கண்டோம். இந்தக் கோவிலில் புத்த பகவானின் சிறிய அளவிலான 1,25,000 சிலைகளையும் நிறுவப்போகிறார்கள்.

இமாலயத்தின் அருகே இருப் பதால், மலைகள், சமவெளிகள், பள்ளத்தாக்குகள் என காணும் இடமெல்லாம் அழகு கொலுவீற் றிருக்கிறது. நான்கு முக்கிய நதிகள் நாட்டைப் பொன்விளையும் பூமி ஆக்குகின்றன.

வரலாறு

கி.மு. 2000 ம் ஆண்டில், புலம் பெயர்ந்து வந்த திபெத்தியர்கள் மூலமாக நாகரிகம் தொடங்கியிருக்கும் என்று கணிக்கிறார்கள். தமக்குள் அடிக்கடி போரிட்டுக்கொண்டிருந்த குறுநில மன்னர்களால் ஆட்சி செய்யப் பட்டது. ஏழு, எட்டாம் நூற்றாண்டுகளில் இந்தியாவிலிருந்து புத்த மதம் பரவியது. 1907 இல் உக்யேன் வாங்சக் (Ugyen Wangchuck) என்னும் அரசர் பிற மன்னர்களை வென்று பூடானை ஒரே நாடாக்கினார். 1910 இல், நாட்டின் பாதுகாப்பு, அயல்நாட்டு உறவுகள் ஆகியவற்றை இந்தியாவில் இருந்த பிரிட்டிஷ் அரசிடம் ஒப்படைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். 1947 இல் இந்தியா சுதந்திரம் பெற்றபின், நம் நாட்டோடு இத்தகைய உடன்பாடு தொடர்கிறது. ஆகவே, பூடான் நமக்கு அண்டைய நட்புநாடு மட்டுமல்ல, சகோதர தேசம்.

ஆட்சி முறை

2008. மன்னர் ஜிக்மே சிங்யே வாங்சுக் (Jigme Singye Wangchuck) தன் மன்னர் ஆட்சியைத் துறந்தார். பூடானின் முதல் நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. முதலமைச்சர் தலைமையில் மக்களாட்சி நடக்கிறது. நாட்டுத் தலைவர் இன்றைய மன்னர் ஜிக்மே கேசர் நாம்கையல் வாங்சுக் (Jigme Khesar Namgyel Wangchuck).

பொருளாதாரம்

மக்களின் முக்கிய தொழில் விவசாயம். நெல், சோளம் ஆகியவை முக்கிய பயிர்கள். கோதுமை, ஆப்பிள் ஆகியவையும் பல குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் தருகின்றன. குறிப்பிடும்படியான தொழில்கள் எதுவும் இல்லை. மக்கள் தொகையில் 30 சதவீதம் மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருக் கிறார்கள்.

பூடானிலிருந்து ஆண்டுதோறும் ரூபாய் 915 கோடிக்கு இந்தியா இறக்குமதி செய்கிறது. இதில் முக்கிய ஐட்டம் என்ன தெரியுமா? மின்சாரம்! ஆமாம், நம் நாட்டின் வட கிழக்கு மாநிலங்களின் மின்சாரப் பசியைத் தீர்த்துவைப்பது பூடான்தான். அங்கே, பெருகி ஓடும் நதிகள் இருப்பதால், நாம் அங்கே நீர்மின்சக்தி நிலையங்கள் அமைத்திருக்கிறோம். பூடானில் தொழிற்சாலைகள் அதிகம் இல்லாததால், மின்சாரம் உபரியாகிறது. இதை நாம் வாங்கிக்கொள்கிறோம். அவர்களுக்கு ஏற்றுமதி வருமானம், நமக்கு மிகத் தேவையான மின்சாரம். இரு நாட்டுக்கும் லாபம் தரும் ஏற்பாடு.

பூடானுக்கு ஆண்டுக்கு ரூ. 2,074 கோடிக்கு ஏற்றுமதி செய்கிறோம். காய்கறிகள், பழங்கள், அன்றாடத் தேவைக்கு தேவையான இந்தியத் தயாரிப்புப் பொருட்களைப் பூடான் கடைகளில் பார்த்தபோது, பெருமை யாக இருந்தது.

பாரோ (Paro) என்னும் ஊரில் டின்னரின்போது, கர்மா (Karma) என்னும் தொழிலதிபரை சந்தித்தோம். அவர் ஒரு புதிர் போட்டார், “எங்கள் நாட்டில் வீட்டுக்கு வீடு ஆடு, மாடுகள் வளர்க்கிறோம். எங்களில் பெரும்பாலானோர் அசைவ உணவு சாப்பிடுபவர்கள். இந்த மாமிசம் ஒட்டுமொத்தமாக இந்தியாவி லிருந்துதான் வருகிறது. ஏன்?”

எனக்கும், நண்பர்கள் அமிதாவ் ஸஹா, அசோக் கர்பந்தா, அம்ரீஷ் ஸைஹல் ஆகிய ஒருவருக்கும் பதில் தெரியவில்லை. கர்மாவே பதில் சொன்னார். “நாங்கள் புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள். எந்த உயிரையும் கொல்லக்கூடாது என்று புத்தமதம் சொல்கிறது. ஆனால், மாமிசம் உண்ணத் தடை கிடையாது. சாப்பிடும் மாமிசத்தை உங்களிடம் வாங்குகிறோம்,” ஏற்றுமதியையும் மீறி, பூடானின் ரோடுகள். மின்நிலையங்கள் போன்றவை அமைப்பதிலும், பராமரிப்பதிலும். இந்தியாவின் கணிசமான நிதி உதவியும், பொறியியல் வல்லுநர்கள் உழைப்பும் இருக்கிறது.

நாணய முறை

கரென்சி பெயர் கூல்ட்ரம். (Ngultrum). இன்றைய மதிப்பின்படி, நம் ஒரு ரூபாய்க்கு சமம். இந்தியர் களுக்குப் பிரச்சனையே கிடையாது. ஹோட்டல்கள், கடைகள் ஆகிய எல்லா இடங்களிலும் நம் ரூபாயை வாங்கிக்கொள்கிறார்கள்.

பயணம்

பூடான் போவது செம ஈஸி. நமக்கு விசா தேவையில்லை. பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் எதையாவது ஒன்றைக் காட்டினால் போதும். பயண நேரமும் மிகக் குறைவு. கொல்கத்தாவிலிருந்து ஒன்றேகால் மணி நேரம்; தில்லியிலிருந்து இரண்டு மணி நேரம். ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் மழை பெய்யும். மற்ற மாதங்கள் அத்தனையும் பயணத்துக்கு ஏற்றவை.

பிசினஸ் டிப்ஸ்

பூடான் மக்கள் நேர்மையா னவர்கள், ஒழுங்கும், கட்டுப்பாடும் கொண்டவர்கள். டிராஃபிக் விதிகள் தொடங்கி, அத்தனை நெறிமுறை களையும் கடைப்பிடிப்பவர்கள். இந்த நேர்மை, ஒழுங்கு, கட்டுப்பாட்டை உங்களிடம் எதிர்பார்ப்பார்கள்.

பாரம்பரியத்தில் அபார நம்பிக்கை கொண்டவர்கள். அவர்கள் அணியும் ஆடைகள் இதைப் பிரதிபலிக்கும், ஆண்களின் ஆடை பெயர் கேரா (Kera). பெண்களின் ஆடை பெயர் கிரா (Kira). பிசினஸில் ஆண்கள் ஆதிக்கம்தான். மீட்டிங்குகளுக்கு அவர்கள் வரும்போது, கோட் சூட் எதிர்பார்க்காதீர்கள். கேராவில்தான் வருவார்கள். நாட்டு மன்னரைத் தெய்வமாக மதிப்பவர்கள். புத்த மதத்தில் அபார நம்பிக்கை. எந்த விதத்திலும், இந்த உணர்வுகளைக் காயப்படுத்தி விடாதீர்கள்.

பின் குறிப்பு:

பூடானிலிருந்து திரும்பி வரும்போது, மனம் முழுக்க சந்தோஷம். இரண்டு முக்கிய சந்தே கங்கள் ஏராளமான வட இந்திய பிசினஸ்மேன்களை, சுற்றுலாப் பயணிகளைச் சந்தித்தோம். ஒரு தமிழ் முகத்தைக்கூடப் பார்க்கவில்லை. ஏன்?

பூடான் அழகான நாடு. 1967 இல் வெளியான ஜூவல் தீஃப் (Jewel Thief) படத்தின் பல காட்சிகள் இங்கே ஷூட் செய்யப்பட்டதாகச் சொன்னார்கள். நம்ம ஊர் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் போன்ற நடிகர்கள் ஏன் இன்னும் இங்கே டூயட் பாடவில்லை.

தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

slvmoorthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x