Published : 02 Jan 2020 10:26 AM
Last Updated : 02 Jan 2020 10:26 AM

நிர்மலா சீதாராமனின் 2-வது பட்ஜெட் வருமான வரி சலுகையை எதிர்நோக்கும் சம்பளதாரர்கள்

பொதுவாக பட்ஜெட் தாக்கல் செய்யும்போது பொருட்களின் விலை உயரும் அல்லது குறையும் என்ற எதிர்பார்ப்புகள் இருந்த சூழல்மாறி, எந்தெந்த பிரிவினருக்கு சலுகைகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கிஉள்ளது. தற்போது மாதாந்திர சம்பளதாரர்களின் எதிர்பார்ப்பு வரிச்சலுகை இருக்குமா என்பதுதான்.

மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு கடந்த ஜூன் மாதத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன். தற்போது இந்த ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி அவர் தனது இரண்டாவது பட்ஜெட்டை தாக்கல் செய்யஉள்ளார். இது பல்வேறு தரப்பில்மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கிஉள்ளது.

பட்ஜெட்டுக்கு முன்பாகவே கார்ப்பரேட் வரி குறைப்பு உள்ளிட்டபல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளார். பொருளாதார தேக்க நிலையைப் போக்க இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இத்தகைய நடவடிக்கையால் அரசின்வருமானம் ரூ.1.45 கோடி அளவுக்கு குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த மாதம் தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில் மாதாந்திர சம்பளதாரர்களுக்கு வரிச் சலுகை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு பெரும்பாலானோர் மத்தியில் தீவிரமடைந்துள்ளது.

மேலும் கடந்த ஆண்டில் சரக்கு மற்றும் சேவை வரி பல முறை குறைக்கப்பட்டுள்ளது.

வரி குறைப்பு நடவடிக்கை ஒருபுறம் எடுக்கப்பட்டாலும், பொருளாதார தேக்கநிலை காரணமாக அரசுக்கு வர வேண்டிய வரி வருவாயும் குறைந்துள்ளது. மக்களின் நுகர்வு அளவும் சரிந்து வளர்ச்சியை சரிவடைய செய்துள்ளது. இதனால் அரசு வரி வருவாய் இலக்கை எட்ட முடியாத சூழல் உருவாகியுள்ளது. ஜிஎஸ்டி கவுன்சிலின் கடந்த நான்கு கூட்டத்திலும் வரி வருவாய் இலக்கு எட்டப்படாதது குறித்து கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவாக நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (ஜிடிபி) விகிதம் 4.5 சதவீதமாக சரிந்துள்ளது. மோடி அரசின் 2.0 முழுமையான பட்ஜெட்டில் சம்பளதாரர்களுக்கு அதிக சலுகை கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு எதிர்பார்க்கின்றனர் சம்பளப் பிரிவினர்.

வெளிநாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் குறிப்பாக சீனா, தென்கொரியா, இந்தோனேசியா நிறுவனங்கள் 25 சதவீதம் வரி செலுத்துகின்றன. இந்தியாவிலும் வரிவிதிப்பை ஒரே அளவிலானதாக்க வேண்டும் என்று நிறுவன தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், கூடுதல் வரி (செஸ்) விதிப்பதை திரும்பப் பெறப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதேபோல முதலீடுகள் மீதான மூலதன ஆதாய வரி விதிப்பை திரும்பப் பெற்றார்.

அதேசமயம் பொருட்கள் மீதான சர்சார்ஜ் அதிகரிக்கப்பட்டுள்ளது. 35.88 சதவீதமாக இருந்தது தற்போது 39 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இடைக்கால பட்ஜெட்டில் ரூ.5 லட்சம் வரையிலான ஆண்டு ஊதியம் பெறுவோருக்கு வரிச் சலுகை கிடைத்தது. ஆனால் ரூ.5 லட்சத்துக்கு மேலான வருமானம் ஈட்டும் பிரிவினருக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் நவம்பர் வரையான காலத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.3,28,365 கோடி. ஆனால் எதிர்பார்க்கப்பட்டதோ ரூ.5,26,000 கோடியாகும்.

அரசின் வரி வருவாய் குறைந்து வரும் சூழலில் சம்பளதாரர்களுக்கு வரிச் சலுகை கிடைப்பதற்கான வாய்ப்புகள் மிகமிக அரிது என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் வழக்கம்போல மக்களிடம் எதிர்பார்ப்பு மேலோங்கியே காணப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x