தொடர்ந்து நான்காவது மாதமாக 8 முக்கியத் துறைகளின் உற்பத்தி 1.5 சதவீதம் சரிவு

தொடர்ந்து நான்காவது மாதமாக 8 முக்கியத் துறைகளின் உற்பத்தி 1.5 சதவீதம் சரிவு
Updated on
1 min read

எட்டு முக்கியத் துறைகளின் உற்பத்தி நவம்பர் மாதத்தில் 1.5 சதவீதம் சரிந்துள்ளது. தவிர, 5 துறைகளின் வளர்ச்சி (-) எதிர்நிலைக்கு சென்றுள்ளது.

நிலக்கரி உற்பத்தி, இரும்பு,சிமென்ட், மின்சார உற்பத்தி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள் தயாரிப்பு, உரங்கள் தயாரிப்பு ஆகிய துறைகள் நாட்டின் 8 முக்கியத் துறைகளாக கருதப்படுகின்றன. நாட்டின் வளர்ச்சியில் இத்துறைகள் பெரும் பங்கு வகிக்கின்றன. இந்நிலையில் இத்துறைகள் கடந்த 4 மாதங்களாக கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன.

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இத்துறைகளின் வளர்ச்சி 3.3 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 1.5 சதவீதமாக சரிந்துள்ளது. அக்டோபர் மாதம் 5.8 சதவீதம் சரிவைக் கண்டது. இந்நிலையில் மூன்று துறைகளைத் தவிர மற்ற 5 துறைகளின் வளர்ச்சி எதிர்நிலைக்குச் சென்றுள்ளது.

சிமென்ட் உற்பத்தி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8.8 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 4.1 சதவீதமாக குறைந்துள்ளது. சுத்திகரிப்பு தயாரிப்புகள் மற்றும் உரங்கள் தயாரிப்பு துறை மட்டும் சென்ற ஆண்டை விட வளர்ச்சி கண்டுள்ளன. சுத்திகரிப்பு பொருட்கள் தயாரிப்பு 3.1 சதவீத அளவிலும், உரங்கள் தயாரிப்பு 13.6 சதவீத அளவிலும் சென்ற ஆண்டைவிட அதிகரித்துள்ளன.

நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் ஒட்டுமொத்த அளவில் இத்துறைகள் எவ்வித வளர்ச்சியையும் காணவில்லை. சென்ற ஆண்டு இக்காலக்கட்டத்தில் 5.1 சதவீத வளர்ச்சியை எட்டியிருந்தது.

ஆகஸ்ட் மாதம் முதல் இத்துறைகளின் வளர்ச்சி எதிர்நிலைக்கு சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in