

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பான (இபிஎஃப்ஓ) தங்கள் வசமுள்ள நிதியில் ஒரு பகுதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக ரூ. 5 ஆயிரம் கோடியை ஆகஸ்ட் 6-ம் தேதி முதலீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளது.
இதற்கான விழா மும்பையில் ஆகஸ்ட் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கு மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தலைமை தாங்குகிறார்.
இத்தகவலை நேற்று நடைபெற்ற அசோசேம் விழா வில் இபிஎஃப்ஓ ஆணையர் கே.கே. ஜலான் தெரிவித்துள்ளார்.
நடப்பு நிதி ஆண்டில் இடிஎஃப் பங்குகளில் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டுத் திட்டங்களில் 5 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை முதலீடு செய்வதற்கு கடந்த ஏப்ரலில் இபிஎஃப்ஓ அனுமதி அளித்தது. இதன்படி முதல் கட்டமாக நடப்பு நிதி ஆண்டில் இடிஎஃப் திட்டங்களில் 5 சதவீத முதலீட்டை மேற்கொள்ள இபிஎஃப்ஓ முடிவு செய்துள்ளது.
எவ்வளவு தொகை முதலீடு செய்யப்படும் என்று கேட்டதற்கு, நிதி அமைச்சகம் 15 சதவீத அளவுக்கு முதலீடு செய்ய அனுமதித்துள்ளது. இருப்பினும் வாரியம் முதல் கட்டமாக 5 சதவீத முதலீட்டை மேற்கொள்ள ஒப்புக் கொண்டதாக ஜலான் கூறினார்.
ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலத்தில் இபிஎப்ஓ மாதாந்திர சேமிப்பு ரூ. 8,200 கோடியாகும். இதில் 5 சதவீத தொகை ரூ. 410 கோடியை இடிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்ய முடியும் என்று அவர் கூறினார்.
இபிஎப் என்பது நீண்ட கால அடிப்படையிலான முதலீட்டை மேற்கொள்ளும் அமைப்பாகும். பங்குச் சந்தையும் இதைப் போன்று நீண்ட கால முதலீடுகளுக்கு ஏற்றது. இருப்பினும் பங்குச் சந்தை முதலீடுகளில் நஷ்டம் ஏற் படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. அதையும் கருத்தில் கொண்டுதான் முதலீடுகள் மேற்கொள்ளப்படுகிறது.
பிஎஃப் நிதியில் கூடுதல் தொகையானது ரூ. 6 ஆயிரம் கோடி வரை இருக்கும். அதாவது மொத்தம் உள்ள ரூ. 6.5 லட்சம் நிதியில் இது ஒரு சதவீதம் மட்டுமே என்று அவர் கூறினார்.
பங்குச் சந்தையின் போக்கை சரிவர கணிப்பதற்கு உதவியாக எஸ்பிஐ பரஸ்பர நிதி திட்டத்தின் உதவியை இபிஎஃப்ஓ பயன்படுத் திக்கொள்ளும்.
பங்குச் சந்தையில் ஸ்திரமற்ற போக்கு நிலவுவதால் இதுவரை இபிஎஃப்ஓ அமைப்பு எத்தகயை முதலீட்டையும் செய்ததில்லை. இப்போதுதான் முதல் முறையாக பங்குச் சந்தையில் முதலீடு செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.