

இந்திய பொருளாதாரத்தில் வங்கிகளின் பங்களிப்பு மிக முக்கியமாகும். பொதுமக்கள் செய்யும் முதலீடுகளை தேவைப்பட்டவா்களுக்குக் கடனாக வழங்குவது வங்கி வா்த்தகத்தின் முக்கிய அம்சமாகும். தொழில் துறையில் பொருள்களின் உற்பத்தி முதல் தனிப்பட்டவருக்கு வீட்டுக் கடன் வரை, பொருளாதாரத்தில் பலவிதமான செயல்பாடுகளுக்குத் தேவையான நிதி ஆதாரங்களை கடன்கள் மூலம் வங்கிகள் அளிக்கின்றன. வங்கிகள் வழங்கும் கடன்கள் பொருளாதார வளா்ச்சியில் ஒரு முக்கிய அங்கமாகும்.
பொதுமக்கள் செய்யும் முதலீட்டுத் தொகை முழுவதையும் வங்கிகளால் கடனாக வழங்கிவிட முடியாது. கடனாக பெறும் தொகையில் இருந்து குறிப்பிட்ட தொகையை அரசு கருவூலப் பத்திரங்களிலும், ரிசா்வ் வங்கிக் கணக்கிலும் வைக்க வேண்டும். மீதமுள்ள தொகையை மட்டுமே கடனாக வங்கிகள் வழங்க முடியும். வங்கி வாடிக்கையாளா்களின் சேமிப்புகளுக்கான பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த வழிமுறைகளை ரிசா்வ் வங்கி வகுத்துள்ளது.
வழங்கப்படும் கடன் தொகையை முழுமையாக மீட்க வேண்டிய கடமையும் பொறுப்பும் வங்கிகளுக்கு உண்டு. ஆனால் சில நேரங்களில் இதுபோன்ற கடன்கள் திரும்பி வராமல் வங்கிகளுக்கு பிரச்சினையை ஏற்படுத்தி விடுவது உண்டு. வாராக் கடன்கள் இல்லாமல், வங்கிகள் வா்த்தகம் செய்ய முடியாது என்பது உண்மைதான். ஆனால் அதுவே தலையாயப் பிரச்சினை என்றால் அதனை சமாளிப்பதற்கே பெரும் பொருளும், நேரமும் செலவிடும் சூழல் உருவாகி விடுகிறது. அது வங்கிகளை பெரும் நிதி நெருகடியில் தள்ளி விடுகிறது.
2019-ம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி இந்தியாவில் பல்வேறு வங்கிகளிலும் உள்ள வாராக்கடன் அளவு 7.9 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இதனை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
இவ்வளவு பெரியத் தொகை வங்கிகளுக்கு வராமல் இருப்பது பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. பொதுத்துறை வங்கிகள் குறித்து தற்போது பேச்சு எழுந்தாலே, அது வாராக் கடன்கள் பற்றியது தான் என்று எண்ணும் அளவுக்கு நிலைமை உள்ளது. வாராக்கடன்கள் குறிப்பிட்ட வங்கியை மட்டுமல்லாமல் நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் பெரும் தேக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வாராக்கடனால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து பல்வேறு புத்தகங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. வாராக்கடன்களால் பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்பு பற்றியும் விரிவான அலசல்கள் செய்யப்பட்டுள்ளன.
ஆனால் வாராக்கடனை வங்கிகள் எவ்வாறு தடுக்கலாம், வாராக்கடன் பிரச்சினை ஏற்படாமல் வங்கியாளர்களும், கணக்கு தணிக்கையாளர்களும் எவ்வாறு இணைந்து செயல்படலாம் என்பது பற்றி புதிய கோணத்தில் புத்தகம் ஒன்று வெளியாகியுள்ளது.
வாராக்கடனை தடுத்து நிறுத்துவது எப்படி? என்பது குறித்து ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள இந்த புத்தகத்துக்கு ‘ARREST NPAs’ என பெயரிடப்பட்டுள்ளது. ஆடிட்டர் வி.யுவராஜ் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார்.
புத்தக ஆசிரியர்
ஆடிட்டர் வி.யுவராஜ் தணிக்கையாளராக 30 ஆண்டுகள் நீண்ட அனுபவம் வாய்ந்தவர். தணிக்கை துறை மட்டுமின்றி வங்கித்துறை, பொருளாதாரம் போன்றவற்றிலும் ஆழ்ந்த அறிவு கொண்டவர். வங்கி தணிக்கையில் தனி அனுபவம் கொண்டவர். வங்கிகளில் இருந்து கடன் பெறுபவர்களின் பொருட்கள் கையிருப்பை (ஸ்டாக்) தணிக்கை செய்வதில் பல வங்கிகளுக்காக பணியாற்றியுள்ளார்.
வங்கி மோசடிகளை எப்படி தடுக்க முடியும் என்பது பற்றியும் அதற்கு தேவையான செயல்பாடுகள், நுட்பங்கள் குறித்தும் யுவராஜ் இந்த புத்கத்தில் விரிவாக எடுத்துக் கூறியுள்ளார்.
குறிப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளில் எவ்வாறு கடன் பெறப்படுகிறது. கடன் பெறும்போது அவர்கள், தங்கள் தொழிலில் காட்டும் சொத்து மதிப்பு, அதனை எவ்வாறு ஆய்வு செய்ய வேண்டும் என்பதை விரிவாகக் கூறியுள்ளார். இதற்காக குறிப்பிட்ட சில துறைகளை எடுத்துக் கொண்டு அவற்றில் சொத்து மதிப்பு எவ்வாறு அதிகரித்து காட்டப்பட வாய்ப்பு இருக்கும் என்பதையும் அவர் பட்டியலிட்டுள்ளார்.
உள்கட்டமைப்பு நிறுவனங்கள், ஜூவல்லரிகள், நகை உற்பத்தி நிறுவனங்கள், இரும்பு தயாரிப்பு நிறுவனங்கள், வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள், தோல் தொழில், குளிர்பான தயாரிப்பு நிறுவனங்கள், குளிர்பதன கிடங்குகள் உட்பட பல தொழில் சார்ந்த நிறுவனங்களில் கடனுக்காக கோரப்படும் முதலீடுகள், கையிருப்பு, உள்ளிட்ட விவரங்களை எடுத்துக்காட்டுடன் எளிதாக புரிந்து கொள்ளும்படி தெரிவித்துள்ளார்.
கனரா வங்கியின் தலைவர் டி.என். மனோகரன் இந்த புத்தகத்துக்கு அணிந்துரை எழுதியுள்ளார். அதில் ஆடிட்டர் யுவராஜ் வாராக்கடன் விவரங்களை எவ்வாறு அணுகியுள்ளார் என பட்டியலிட்டுள்ளார். எவ்வாறு தவறு நடைபெறுகிறது, முறைகேடான வகையில் எவ்வாறு கடன் பெறுகிறார்கள், இதற்காக தவறான தகவல்களை எவ்வாறு பெறுகிறார்கள் என்பதை வங்கித்துறையில் நீண்ட அனுபவம் கொண்ட யுவராஜ், விரிவாக விளக்கியுள்ளதாக மனோகரன் தனது அணிந்துரையில் கூறியுள்ளார்.
இதுபற்றி ஆடிட்டர் வி.யுவராஜுடன் ஒரு உரையாடல்:
வாராக்கடன் பிரச்சினை பற்றி பலரும் பல கோணங்களில் எழுதி வரும் நிலையில் அதனை தீர்ப்பது பற்றிய புத்தகம் ஏன்?
வாராக்கடன் என்பது பெரிய அளவில் நாட்டிற்கும், நமது பொருளாதாரத்திற்கும் பெரிய சுமை என்பதை மறுக்க முடியாது. ஆனால் பெரிய அளவில் கடன் சுமை ஏற்பட்ட பிறகு அதனை எப்படி தீர்ப்பது என்பது பற்றி யோசிப்பதற்கு பதிலாக இதனை அடிப்படையிலேயே தீர்ப்பது எப்படி என்பது பற்றி எனது கருத்தை முன்வைத்துள்ளேன்.
வாராக்கடனை வரும்முன்பே தடுப்பது என்றால் எப்படி?
எந்த ஒரு பிரச்சினையும் பெரிய அளவில் சுமையாக மாறுகிறது என்றால் அதனை தொடக்கத்திலேயே கண்டறிய வேண்டும். ஆரம்ப புள்ளியில் கண்டறிந்து தடுக்க முடியும். இதனை வங்கியாளர்களும், தணிக்கையாளர்களும் மட்டுமே தீர்க்க முடியும். வங்கிகள் கொடுத்த கடன் எப்படி வாராக்கடனாக வாய்ப்பு இருக்கிறது என்பதை அவர்களது கணக்குகளை ஆய்வறிந்தே கண்டறிய முடியும். இதன் அடிப்படையிலேயே கணக்குகளை எவ்வாறு அணுகுவது என்பதை பற்றி எனது புத்தகத்தில் விரிவாக கூறியுள்ளேன். குறிப்பாக வங்கிகளை திட்டமிட்டு ஏமாற்றி கடன் பெறும் ஒரு சிலரின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த முடியும்.
தவறான வழிகளில் கடன் வாங்கி தெரியாமல் சிக்கிக் கொண்டு தவிக்கும் வேறு சில தொழிலதிபர்களுக்கும் தங்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினையை முன்கூட்டியே உணர்ந்து தெளிவுபெறும் வகையில் இது வாய்ப்பாக அமையும்.
வாராக்கடன்களால் வேறு என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும்?
வாராக்கடன் என்பது கடன் கொடுத்த வங்கிகளையும், கடன் பெற்ற நிறுவனத்தையும் மட்டுமே பாதிப்பதில்லை. அதனையும் தாண்டி வங்கி நடைமுறை, கடன் கிடைக்காத சூழல் உருவாவது உள்ளிட்ட காரணங்களால் பொருளாதாரத்தை பெரிய அளவில் பாதிக்கிறது. விரிவாக கூற வேண்டுமென்றால் வாராக்கடன் பிரச்சினையால் இன்று வங்கிகள் கடன் வழங்கவே அச்சப்படுகின்றன.
அமெரிக்காவில் நிறுவனக் கடன் வழங்கும் அளவு ஜிடிபியில் 150 சதவீதம் என்ற அளவில் உள்ள நிலையில், இந்தியாவில் நிறுவனக் கடன் வழங்கும் அளவு ஜிடிபியில் 57 சதவீதம் என்ற அளவில் தான் உள்ளது. வாராக்கடன் போன்ற பிரச்சினை தொடர்ந்தால் வங்கிகளிடம் இருந்து தொழிலதிபர்கள் நியாயமான முறையில் கடன் பெற்று தொழில் செய்ய முடியாத சூழல் ஏற்படும்.
வங்கிகள் கொடுக்க வேண்டிய பெரும் கடன் தொகை முழுவதும் இதுபோன்று முறைகேடாக கடன் பெற்று ஏமாற்றிய தொழிலதிபர்கள் வசம் சென்றுவிட்டால் நியாயமான முறையில் கடன் பெற விரும்பும் தொழிலதிபர்களுக்கு கடன் கிடைக்காத சூழல் ஏற்படும். இதனால் நல்லமுறையில் தொழில் செய்து வரும் ஒரு தொழிலதிபருக்கு கடன் கிடைக்காததால் அவர் தனது தொழிலை மேம்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டு விடும்.
இதனால் தொழில்துறையிலும் ஒரு சமனற்ற சூழல் ஏற்பட்டு விடும். எனவே வங்கிகளை காப்பது மட்டுமின்றி தொழில்துறையின் வளர்ச்சிக்கும், பொருளாதார தேக்கம் ஏற்படாமல் காக்கவும் வாராக்கடன்கள் ஏற்படாமல் தடுப்பது மிகவும் அவசியம். இதன் பின்னணியிலேயே இந்த புத்தகத்தை எழுதியுள்ளேன்.
வங்கியாளர்களும், தணிக்கையாளர்களும் கவனிக்க வேண்டிய அம்சங்கள் என்ன?
கடன் வழங்கும்போது பொதுவாக மூன்று விஷயங்கள் உள்ளன. ஒன்று கடன் கோரும் நிறுவனம் வைத்துள்ள பொருட்களின் கையிருப்பு விவரங்கள். முதலில் அந்த நிறுவனம் கூறியபடி கையிருப்பு உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். பிறகு கையிருப்பிற்கான மதிப்பீடு சரியாக செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். உதாரணமாக 75 கோடி ரூபாய் மதிப்புள்ள சரக்குகள் கையிருப்பு உள்ளதாக கூறப்பட்டால் அதன் விலையை 100 கோடி ரூபாய் என அதிகமாக குறிப்பிட்டு காட்டவும் வாய்ப்பு உண்டு. எனவே குறிப்பிடப்பட்டுள்ள விலை சரியானதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
அடுத்ததாக கொள்முதல் செய்த வகைக்கு கொடுக்க வேண்டிய தொகை. அதுபற்றி விரிவாக அணுக வேண்டும். மூன்றாவதாக கடன் பெறும் நிறுவனத்துக்கு வர வேண்டிய தொகை. விற்பனை செய்த பொருட்களுக்கு வந்து சேர வேண்டிய தொகை 90 நாட்களுக்குள் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
கடனுக்காக நிறுவனங்களின் கணக்குகளை தணிக்கை செய்யச் செல்லும்போது என்னென்ன பிரச்சினைகள் இருக்கும்?
பொதுவாக கடன் பெறும் நிறுவனங்களின் கையிருப்பாக இருக்கும் பொருட்களை, ஸ்டாக் ஆடிட் செய்ய அதிக நாட்கள் அவகாசம் தரப்பட வாய்ப்பில்லை. ஓரிரு நாட்களுக்குள் தணிக்கை செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கும். அந்த குறிப்பிட்ட நாட்களுக்குள் தணிக்கை செய்வது கடினமாக இருக்கும். அதுபோன்ற சூழலில் எவ்வாறு வேகமாகவும், சரியான முறையிலும் செயல்படலாம் என்பதை இந்த புத்தகத்தில் வழிகாட்டியுள்ளேன். அதற்கான நுட்பங்களை விளக்கியுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
புத்தக ஆசிரியர் வி.யுவராஜை தொடர்பு கொள்ள: yuvaraj@yuvarajassociates.com