Published : 26 Dec 2019 10:07 AM
Last Updated : 26 Dec 2019 10:07 AM

முதலீடுகளுக்கென்று தனி ஒப்பந்தம்: ஐரோப்பிய ஒன்றியம் விருப்பம்

வர்த்தகம் மற்றும் முதலீடு இரண்டும் ஒரே ஒப்பந்தத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகிற நிலையில், முதலீடுகளுக்கு மட்டும்தனி ஒப்பந்த முறையை உருவாக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ளது. இந்தியாவுடன் அவ்வகையான ஒப்பந்தத்தை மேற்கொள்ள அது விருப்பம் தெரிவித்துள்ளது.

தாராளவாத வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து (எஃப்டிஏ) முதலீடு தொடர்பான ஒப்பந்தங்களை பிரித்து, அதைத் தனி ஒப்பந்தமாக மாற்ற வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் விரும்புகிறது.

சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றியம் சிங்கப்பூருடன் இவ்வகையான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவுடன் முதலீடுகளுக்கு மட்டுமே தனியாக ஒப்பந்ததை மேற்கொள்ள ஆர்வம் தெரிவித்துள்ளது.

ஆனால், இந்தியத் தரப்பில் இருந்து இதுவரை எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை. வர்த்தகம் மற்றும் முதலீடு இரண்டுமே ‘இருதரப்பு தாராளவாத வர்த்தகஒப்பந்த’த்தின்கீழ் மேற்கொள்ளப்படுகின்றன.

தனித்தனி ஒப்பந்தங்கள்

முதலீடு செய்ய விருப்பம் இருந்தும் வர்த்தகம் தொடர்பான கோரிக்கையில் முரண்பாடு ஏற்பட்டால், முதலீடு செய்யும் வாய்ப்பும் கைவிட்டு போகிறது. இந்நிலையில் வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஒரே ஒப்பந்தத்தின்கீழ் கொண்டுவராமல், தனித்தனி ஒப்பந்தமாக கொண்டு வர வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ளது. இந்தியாவுடன் அவ்வகையான ஒப்பந்ததை மேற்கொள்ள ஆர்வம் காட்டி வருகிறது.

தாராளவாத வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இந்தியாவுக்கும் இடையே பரஸ்பர முடிவு எட்டப்படவில்லை. வாகனங்கள், ஒயின் போன்றவற்றை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கும், வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் போன்ற நிதி அமைப்புகளை இந்தியாவில் திறப்பதற்கும் ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி கோரியது.

அதே சமயம் இந்திய அரசு, இந்தியர்கள் பயன்பெரும்வகையில் ஐரோப்பிய ஒன்றியம் அதன் விசா முறையை எளிமைப்படுத்த வேண்டும், குறிப்பாக கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான விசாக்களை எளிமைப்படுத்த வேண்டும் என்றும், அவுட்சோர்ஸிங் பணிகளை இந்தியாவுக்கு வழங்க வேண்டும் கோரியது.

இதுதொடர்பாக இருநாடுகளுக்கும் இடையே உடன்படிக்கை ஏற்படவில்லை. இதனால் முதலீடு தொடர்பான ஒப்பந்தங்களும் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் முதலீடுகளுக்கு தனியாகவும், வர்த்தக உறவுக்கு தனியாகவும் ஒப்பந்த முறையை கொண்டு வர வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x