

இந்திய பொருளாதாரம் தற்போது குறிப்பிடத்தக்க சரிவில் இருப்பதாக சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) கருத்து வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று பங்குச் சந்தையில் சரிவு காணப்பட்டது.
ஆண்டு இறுதி மற்றும் விடுமுறை தினங்கள் அடுத்தடுத்த வருவதால் முதலீட்டாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டதும் சரிவுக்குக் காரணமாக அமைந்தது. மும்பை பங்குச்சந்தையில் 181 புள்ளிகள் சரிந்ததில் குறியீட்டெண் 41,461 புள்ளிகளானது. இதேபோல தேசிய பங்குச் சந்தையில் 48 புள்ளிகள் சரிந்து குறியீட்டெண் 12,214 ஆனது.
வர்த்தகம் முடியும் சமயத்தில் ரிலையன்ஸ் மற்றும் ஹெச்டிஎஃப்சி பங்குகள் அதிக அளவில் வர்த்தகமானதும் குறியீட்டெண் சரிவுக்கு முக்கியக் காரணமாகும்.
தகவல் தொழில்நுட்ப நிறுவன பங்குகளில் ஹெச்சிஎல் மிக அதிகபட்சமாக 1.80 சதவீத அளவுக்கு சரிந்தது. இதற்கு அடுத்தபடியாக ரிலையன்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, டிசிஎஸ், டெக் மஹிந்திரா, லார்சன் அண்ட் டூப்ரோ, பஜாஜ் பைனான்ஸ், ஹெச்டிஎஃப்சி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளும் சரிந்தன.
இண்டஸ்இந்த் வங்கி, ஓஎன்ஜிசி, பார்தி ஏர்டெல், என்டிபிசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் பெற்றன. டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பும் 9 காசுகள் சரிந்து ரூ. 71.27 என்ற விலையில் வர்த்தகமானது.