

தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையை இந்திய அரசு உடனடியாக சரி செய்ய வேண்டும். அது தொடர்பான பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) எச்சரித்துள்ளது.
சமீப காலகட்டத்தில் இந்தியா ஏழ்மையை குறிப்பிடத்தக்க அளவில் குறைத்துள்ளது. ஆனால், தற்போது அதன் பொருளாதாரம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது. நுகர்வு, முதலீடு, வரி வருவாய் குறைவு போன்ற காரணிகளால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தடைபட்டுள்ளது. அவற்றை சரி செய்யும் வகையில் இந்திய அரசு முறையான பொருளாதார நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டும் என்று சர்வதேச செலாவணி நிதியத்தின் ஆசியப் பிரிவு தலைமை அதிகாரி ரணீல் சல்கடோ தெரிவித்துள்ளார்.
தற்போதைய நெருக்கடி நிலையை எதிர்கொள்ளும் வகையில் மத்திய அரசு சில பொருளாதார மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. நிறுவனங்களுக்கான நிறுவன வரி 10 சதவீதம் அளவில் குறைக்கப்பட்டது. ரியல் எஸ்டேட்துறையின் வளர்ச்சியை முடுக்கிவிடும் நோக்கில், கைவிடப்பட்டுள்ள கட்டுமானத் திட்டங்களை தொடர்வதற்காக நிதி ஒதுக்கியது. இதன் விளைவாக அரசுக்கான வரி வருவாய் குறைந்துள்ளது.
மேலும் இதுபோலான பொருளாதார சலுகை திட்டங்களை அறிவிக்கும் சூழலில் இந்திய அரசு தற்போது இல்லை என்று குறிப்பிட்டஅவர், ரிசர்வ் வங்கியால் சில மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.
ரிசர்வ் வங்கி இந்த ஆண்டில் தொடர்ந்து 5 முறை வட்டிக் குறைப்பை மேற்கொண்டுள்ளது.இதுவரை 135 அடிப்படைப் புள்ளிகள் வரை குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மாதத் தொடக்கத்தில் நடைபெற்ற நிதிக் கொள்கை கூட்டத்தில் வட்டிக் குறைப்பு மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில், ‘தற்போதைய மந்தநிலை தொடரும்பட்சத்தில், வட்டிக் குறைப்பை மேற்கொள்வதைத் தவிர ரிசர்வ் வங்கிக்கு வேறு வழியில்லை’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது மக்களின் நுகர்வு திறன் சரிந்துள்ளது. அதைசரி செய்யாமல் வேறெந்த நடவடிக்கைகளை எடுத்தாலும் தற்போதைய நிலையில் பலன் தராது என்று பொருளாதார நிபுணர்கள் கூறிவருகின்றனர்.
சமீப காலமாக நிறுவனங்களின் உற்பத்தி கடும் சரிவைக் கண்டுவருகிறது. நுகர்வு,முதலீடு மற்றும் ஏற்றுமதி போன்ற பொருளாதார வளர்ச்சிக்கான காரணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நடப்புநிதி ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 5 சதவீதமாகவும், இரண்டாம் காலாண்டில் 4.5 சதவீதமாகவும் குறைந்துள்ளது. இது கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவிலான சரிவு ஆகும். முந்தைய நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் வளர்ச்சி 7 சதவீதமாக இருந்தது. அது தற்போது 4.5 சதவீதமாக குறைந்து இருப்பது மிகப் பெரிய சரிவு ஆகும். இந்நிலையில் நடப்பு நிதிஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி வீதம் 5 சதவீதமாக குறையும் என்றுரிசர்வ் வங்கி கணித்துள்ளது.
‘நிதி நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றன. நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படுவதற்கு அவை மிகமுக்கியக் காரணம். அது தொடர்பான சிக்கல்களை தீர்க்கும் நடவடிக்கையில் அரசு உடனே இறங்க வேண்டும்’ என்று அவர் கூறினார்.