Last Updated : 24 Aug, 2015 02:49 PM

 

Published : 24 Aug 2015 02:49 PM
Last Updated : 24 Aug 2015 02:49 PM

வணிக நூலகம்: நுண்ணறிவும் முட்டாள் தனமான செயல்களும்

உண்மைகளையும், நேர்மறையான தகவல்களையும் முடிவெடுக்கும் பொழுது பயன்படுத்தினால் தெளிவு நிச்சயம். முடிவுகளால் சில நேரங்களில் வருத்தம் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதிக பட்ச வருத்தங்களை குறைப்பது தான் திறமையான முடிவுகளுக்கு சான்று.

நுண்ணறிவு என்பது மனிதர்களுக்கு இன்றியமையாத ஒன்று. அதிலும் வணிகத்திற்கு அத்தியாவசியத் தேவையாகும். சில நேரங்களில் நுண் ணறிவுக் கண்ணாடி அணிந்து கொண்டு முட்டாள்தனமான செயல்களை பார்த்துக் கொண்டிருப்போம். நுண்ணறிவுக்கும் பொது அறிவுக்கும் காத தூர வித்தியாசம் இருந்தாலும், இரண்டும் தேவையான ஒன்றே.

நுண்ணறிவைக் கொண்டு பார்க்கும் பொழுது சில நேரங்களில் நாம் அருகில் இருக்கும் பொருளை தூரத்தில் தேடிக்கொண்டிருப்பதற்கு ஒப்பாகும். அதாவது, பார்வையின் தூரத்தை குறைத்து பொது அறிவை துணைக்கு அழைத்தால் நமக்கு கண்ணுக்கு தெரியாமல் போன அந்த பொருட்களோ அல்லது நபர்களோ எளிதில் தெரிவார்கள்.

எலியாஸ் அவாத் என்ற வெர்ஜினிய பல்கலைக்கழக பேராசிரியர் எழுதிய இந்த புத்தகம் கீழே வைக்க முடியாத ஒன்று. நம்முடைய முட்டாள் தனங்களை எண்ணி சிரித்துக் கொண்டே இருக்கும் நிலைக்கு தள்ளிவிடும். எப்படிதான் இந்த புத்தகத்தை எழுதி முடித்தாரோ என்ற மலைப்பு தவிர்க்க முடியாதது ஆகிவிடும். முட்டாள்தனத்தை பொதுவாக சிந்தனை அற்ற செயல் என்று சொல்லுவார்கள். 2014ம் ஆண்டு வெர்ஜினிய பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவில் ஒரு மகத்தான கருத்து தெரிவிக்கப்பட்டது. “சில மனிதர்கள் எதையும் செய்வார்கள் “சிந்திப்பதை தவிர”. ஆராய்ச்சியாளர்கள் மற்றொன்றையும் கூறியுள்ளார்கள். தங்களுக்கு தாங்களே மின் அதிர்வுகளை கொடுத்துக் கொள்வார்களே தவிர சிந்தனையின் பக்கம் செல்லமாட்டார்கள்.

முட்டாள்தனமான செயல்கள் (Stupidity)

தனக்கு தேவையில்லாத பொருளை தன்னிடம் இல்லாத பணத்தைக் கொண்டு தனக்கு பிடிக்காத நபர்களை ஈர்க்க வாங்கும் செயல் முட்டாள்தனத்தின் முதல் உதாரணமாகும். கன்பூசியஸ் கூறியதை போல அறிவாளிகளும் முட்டாள்களும் மாறவே மாட்டார்கள். மாற்றம் என்ற சொல்லே அவர்கள் அகராதியில் இருக்காது.

24 வயதான அமெரிக்கருக்கு பத்து லட்சம் அமெரிக்க டாலர் பரிசு விழுந்தது. ஆனால் உணவு உதவிக்காக கொடுக் கும் 200 அமெரிக்க டாலர் மானியத்தை தவறாமல் மாதந்தோறும் பெற்றுக் கொண்டிருந்தார். அதற்கு அவர் சொன்ன பதில் - இரண்டு வீடுகளை வைத்துக்கொண்டு நான் என்ன செய்ய முடியும். வருமானம் இல்லாத நான் எவ் வாறு செலவுகளை சமாளிக்க முடியும்?

நட்சத்திர கால்பந்து வீரர் கோடிகளில் புரண்டுக் கொண்டிருந்த போதும் உள்ளூர் கடையில் ஒன்பது டாலர் விலையுள்ள டார்ச் லைட்டை திருடியதற்காக கைது செய்யப்பட்டார். அமெரிக்க நகராட்சியில் இரண்டரை லட்சம் டாலர் செலவு செய்து பணம் இல்லை என்று விளம்பரம் கொடுத்தது இந்த வகையை சார்ந்தது.

2013ம் ஆண்டு வெர்ஜினியா மாநில ஆளுநர் பெட்ரோல் வரிகளை குறைத்து விட்டு பிரியஸ் போன்ற அதிக எரிபொருள் சிக்கனமான கார்களுக்கு ஆண்டுக்கு 64 அமெரிக்க டாலர்கள் வரி விதித்தார். இதை தான் நூலாசிரியர் நுண்ணறிவு சார்ந்த முட்டாள் தனம் என்று சொல்லுகிறார். இது போல புத்தகம் முழுவதும் ஏராளமான கருத்துக்கள் தாராளமாக கொடுக்கப்பட்டுள்ளன.

முடிவுகளும் முட்டாள்தனமும்

நுண்ணறிவுக்கு எல்லைகள் உண்டு ஆனால், முட்டாள்தனத்திற்கு இல்லை. முட்டாள்தனம் என்பது ஒரு இனம் புரியாத மனத்தில் உணர்வுகளின் உந்துதலில் சமூதாயத்தை நோக்கி குவிக்கப்பட்டிருக்கும் ஒரு நிலை. அது தெளிவு இல்லாத, அறிவு இல்லாத உறுதியான நிலைப்பாடு ஆகும். அறிவு சார்ந்த, நீதி நெறிமுறை சார்ந்த விளைவுகளை ஏற்படுத்தும். பொதுஅறிவு இல்லாத மற்றவர்களுடன் ஒத்துப்போகாத நிலையில் மீறப்படும் செயல்களே முட்டாள்தனமான கருத்துகளுக்கும், முடிவுகளுக்கும் காரணங்களாக அமைக்கின்றன.

மிடுக்கான நபர்கள் அடிக்கடி முட் டாள்தனமான செயல்களை செய்வார் கள் ஏனென்றால் தாங்கள் திறமையான வர்கள் அல்லது மிடுக்கான நபர்கள் என்ற எண்ணம் அவர்கள் எடுக்கும் வேறு பாடான நிலைசார்ந்த ஆக்ரோஷம் மிக்க, இரக்கமில்லாத முடிவுகள் மூலம் வெளிப்படும். முக்கியமாக பெருவாரியான முட்டாள்தனமான செயல்களும் முடிவுகளும் தேவைக்கு குறைவான தகவல்களின் அடிப்படை யில் நிகழ்கின்றன.

தங்களிடம் இல்லாத செய்திகளையும் இருப்பதாக நினைத்துக்கொண்டு எடுக்கப்படும் முடிவுகள் முட்டாள் தனமான முடிவுகளாக மாறுகின்றன. அவ்வாறு எடுக்கப்படும் மோசமான முடிவுகள் மடமையின் வெளிப்பாடு. அக்கறை இல்லாத தன்மையும் மக்களை முட்டாள் ஆக்கும். ஆனால் ஒவ்வொரு சூழ்நிலையிலும் அக்கறையோடு செயல்படுவது என்பது நடக்காத ஒன்று. மனமாற்றங்கள் நிகழாத வரையில் பார்வைகள் மாறுவதில்லை. குறைப்பாடான கண்ணேட்டம் மிகவும் முக்கியமான பிரச்சனையாகும்.

முட்டாள்தனமான முடிவுகளை நிறுத்துவது எப்படி

பெரும்பான்மையானவர்கள் தர்க்க ரீதியில் முடிவுகளை எடுப்பதாக நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், உணர்வுகளின் அடிப்படையி லும், மெய்ப்பாடுகளின் அடிப்படையி லும் முடிவுகளை எடுத்து அவைகளுக்கு தர்க்க சாயம் பூசுவார்கள். மெய்ப்பாடு களும் கட்டுப்பாடுகளும் குறையும் பொழுது நல்ல முடிவுகள் அதிகரிக்கும். அதாவது நம்முடைய முடிவுகளை நம் எண்ணங்களில் இருந்து விலக்கிவிட்டு அந்த இடத்தில் உண்மைக்கும், நேர்மறை தகவல்களுக்கும் இடமளிக்க வேண்டும். உதாரணமாக;

தந்தையும் மகனும் அவசரகால அறையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். அறுவை சிகிச்சை மருத்துவர் வேகமாக வெளியில் வந்து என் மகனை என்னால் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்த முடியாது என்று கதறுகிறார். அந்த அறுவை சிகிச்சை நபர் யார்? இந்த கேள்விக்கு தந்தை அல்லது தந்தையின் தந்தை என்ற பதில் வேகமாக வந்து விழும். ஆனால் தாயார் என்ற இருட்டு புள்ளி மெய்பாடுகளின் காரணமாக தர்க்கரீதியான முடிவுகளில் இருந்து வேறுபடுத்தப்படுகிறது.

உண்மைகளையும், நேர்மறையான தகவல்களையும் முடிவெடுக்கும் பொழுது பயன்படுத்தினால் தெளிவு நிச்சயம். முடிவுகளால் சில நேரங்களில் வருத்தம் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதிக பட்ச வருத்தங்களை குறைப்பது தான் திறமையான முடிவுகளுக்கு சான்று.

டிக் புல்ட் என்ற லே மேன் சகோதர்களின் கம்பெனியில் நீண்ட கால முதலீட்டு மேலாண்மையில் பணியாற்றியவர் எடுத்த முடிவு மிக மோசமாக அமெரிக்க பொருளாதாரத்தை பாதித்தது. 1990 களில் அவர் எடுத்த முடிவு நிதி மேலாண்மையை மேம்படுத்தியது. அதே போன்ற முடிவை 2007ல் எடுத்த போது அது பெரும் சீற்றத்துடன் பொருளாதாரத்தை வீழ்த்தியது. தலைகுனிவை ஏற்படுத்தியது. இதே போலத்தான் சுய ஈடுபாடும், முன்கூட்டியே தீர்ப்புகளை அறிவிப்பதும் மோசமான முன்னுதாரணங்கள்.

கத்ரினா என்ற புயல் எழுந்த போது அது ஒரு சாதாரண காற்றழுத்த தாழ்வு என்று அவசரக்கால மேலாண்மை தலைவர் அறிவித்தார். அவர் ஏற்கனவே எடுத்த முடிவின் படியும் தன்னுடைய முடிவே இறுதியானது என்ற சுய ஈடுபாட்டிலும் பெரும் பொருட் சேதத்தையும், உயிர் சேதத்தையும் ஏற்படுத்தினார். தேசிய அளவில் இவை பெரும் இழப்புகளை ஏற்படுத்தியது. இது போன்றே தனியார் வியாபார நிறுவனங்களிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் ஆட்சிமுறை என்பது தலையாட்டும் பொம்மைகளாக தலைமையின் கீழ் மற்றவர்களை அணிவகுக்கச் செய்கின்றது.

ஒருவேளை பாதிப்பு ஏற்பட்டால் அது உரிமையாளர்களுக்கு தானே தவிர ‘ஆமாம் சாமிகளுக்குள’ அல்ல. அதனால் எந்த ஒரு முடிவிலும் தலையாட்டி பொம்மைகளின் தாக்கம் இருந்தால் அந்த முடிவை மறு பரிசீலனை செய்வது அவசியம்.

இந்த புத்தகத்தில் பொது அறிவுக்கு என்ன ஏற்பட்டது? நுண்ணறிவில் முட்டாள்தனம் ஏன் ஓங்கி நிற்கிறது? முடிவுகள் ஏன் மோசமானவையாக இருக்கின்றன? அறிவு உள்ளவர்கள் எப்படி முட்டாள் தனமான முடிவுகளை எடுக்கிறார்கள்? இவைகளை கடந்து எப்படி வெளியே வருவது? நேர்மறையான முடிவுகளையும், நுண்ணறிவின் தாக்கத்தையும், பொது அறிவையும் எப்படி உபயோகிப்பது? போன்ற அனைத்து கேள்விகளுக்கும் அருமையான பதில்கள் விரிவாக கூறபட்டுள்ளது. தவிர்க்க கூடாத, படித்தே ஆக வேண்டிய ஒரு புத்தகம்.

rvenkatapathy@rediffmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x