

இந்திய நிறுவனங்கள் சுய சந்தேகங்களை விட்டொழித்துவிட்டு, கட்டற்ற ஆற்றலுடன் செயல்பட வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுகொண்டுள்ளார்.
பட்ஜெட்டுக்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட பொருளாதார மீட்பு நடவடிக்கைகள், பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பலன்களை காட்டத்தொடங்கியுள்ளன. இந்தச் சூழ்நிலையில், நிறுவனங்கள் அவநம்பிக்கையிலிருந்து வெளிவந்து, பேராற்றலுடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
சமீப காலமாக மத்திய அரசுபல்வேறு துணிச்சலான முடிவுகளை எடுத்துள்ளது. வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்ந்து வருகிறது என்று குறிப்பிட்ட அவர், ‘பேரியல் பொருளாதாரம் வலுவாக உள்ளது. பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. அந்நிய செலாவணி இருப்பு உயர்ந்துள்ளது. பிறகு ஏன் நீங்கள் தயங்குகிறீர்கள்? ஏன் எதிர்மறையாக சிந்திக்கிறீர்கள்? உங்கள் சந்தேகங்களில் இருந்து வெளியேவாருங்கள். இந்தியாவின் வளர்ச்சியில் பங்குகொள்ளுங்கள்’ என்று நிறுவனங் களை கேட்டுக் கொண்டார். அரசு பங்கு விலக்கலில் நிறுவனங்கள் பங்களிப்பு செலுத்த வேண்டும் என்றார்.
உங்களோடு இருக்கிறோம்
வர்த்தம் மற்றும் தொழில் துறை கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட அவர், இக்கருத்துகளைத் தெரிவித்தார்.
‘கடந்த 100 ஆண்டுகளாக நீங்கள் இந்த நாட்டின் மீது நம்பிக்கைக் கொண்டு செயல்பட்டு வந்துள்ளீர்கள். தற்போது இன்னும் பலமாக நம்புங்கள். நாங்கள் உங்களோடு இருக்கிறோம்’ என்று அவர் குறிப்பிட்டார்.
மத்திய அரசு சமீப காலமாக பொருளாதார மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
முதலீடுகளை அதிகரிக்க நிறுவனங்களுக்கான நிறுவன வரி 10 சதவீதம் அளவில் குறைக்கப்பட்டது. 10 பொதுத் துறைவங்கிகள் ஒன்றாக இணைக்கப்பட்டு 4 வங்கிகளாக மாற்றப்பட்டன. அந்நிய முதலீடுகள் சார்ந்து பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. வரி வசூலில் வெளிப்படைத்தன்மை கொண்டு வரப்பட்டுள்ளது. இவை அனைத்தும்நிறுவனங்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டவை. இந்த அரசு, நிறுவனங்கள் வளர்ச்சியில் அதிக அக்கறை கொண்டுள்ளது. உங்கள் அவநம்பிக்கையை விடுங்கள் என்று அவர் கூறினார்.