

கிராமங்கள் சார்ந்த தொழில் நிறுவனங்களின் வருவாயை அடுத்த 5 ஆண்டுகளுக்குள் ரூ.2 லட்சம் கோடியாக உயர்த்தும் முயற்சியில் அரசு இறங்கி உள்ளதாக அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
காதி மற்றும் கிராம நிறுவனங்களின் ஆண்டு வருவாய் தற்போதுரூ.75,000 கோடியாக உள்ளது. அதை அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.2லட்சம் கோடியாக உயர்த்துவதற்கான திட்டங்களை மத்திய அரசு மேற்கொள்ள உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் தங்கள் செயல்பாட்டை விரிவாக்க வேண்டும். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் அத்துறையின் பங்களிப்பு மிக முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டார்.
உலக ஏற்றுமதியில் நம் நிறுவனங்களின் பங்கு 2.6 சதவீதமாக உள்ளது. அதை 10 சதவீதமாக உயர்த்த வேண்டும். உலகளாவிய வர்த்தகத்தில் சீன நிறுவனங்களின் பங்கு 17 சதவீதமாக உள்ளது. இந்திய நிறுவனங்கள் சீனாவின் இடத்தை பிடிக்க முயல வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்தியாவின் இறக்குமதி அதிகரித்து இருப்பது குறித்து அவர் கவலை தெரிவித்தார்.
‘நிலக்கரியை ஏற்றுமதி செய்யும்அளவு திறன் இருந்தும், நாம் இன்னும் அதிக அளவில் இறக்குமதி செய்கிறோம். அதேபோல் செய்திதாள்களுக்கான காகிதங்களையும் இறக்குமதி செய்கிறோம். உள்நாட்டிலேயே அவற்றை தயாரிக்கும் அளவில் நம்மிடம் மூல வளங்கள் இருக்கின்றன. அவற்றை நாம் பயன்படுத்த வேண்டும். நாட்டின் இறக்குமதியை குறைப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
எம்எஸ்எம்இ துறையின்கீழ் ஏற்றுமதி சார்ந்து 38,000 நிறுவனங்கள் உள்ளன என்று குறிப்பிட்ட அவர், அவற்றின் மூலம் 11 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் கூடுதல் 5 கோடிவேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஆண்டுக்கான டோல் வருவாய் ரூ.35,000 கோடியாக உயரும் என்று எதிர்பார்ப்பதாக அவர்கூறினார். தற்போது டோல் வருவாய் நாள் ஒன்றுக்கு ரூ.61 கோடியாக உள்ளது. பாஸ்டேக் அறிமுகத்தினால் அது ரூ.81 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.