

பேங்க் ஆஃப் பரோடா, 2018-19 நிதி ஆண்டுக்கான வாராக் கடன் தொகையில் ரூ.5,250 கோடியை குறைத்து தெரிவித்து இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
பேங்க் ஆஃப் பரோடா 2018-19-ம் நிதி ஆண்டுக்கான மொத்த வாராக் கடன் தொகையில் ரூ.5,250 கோடியும், நிகர வாராக்கடன் தொகையில் ரூ.5,250 கோடியும் குறைத்து வெளிட்டுள்ளது. ஆர்பிஐ மேற்கொண்ட கணக்கீட்டில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன.
2018-19 நிதி ஆண்டுக்கான நிதி அறிக்கையில், பேங்க் ஆஃப் பரோடா வங்கி ரூ.69,924 கோடியை மொத்த வாராக் கடனாகவும், ரூ.23,795 கோடியை நிகர வாராக் கடனாகும் அறிவித்தது. ஆனால் இந்திய ரிசர்வ் வங்கி மேற்கொண்ட மதிப்பீட்டில் பேங்க் ஆஃப் பரோடாவின் மொத்த வாராக் கடன் ரூ.75,174 கோடி எனவும், நிகர வாராக் கடன் ரூ.29,045 கோடி எனவும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் நேற்றைய வர்த்தக முடிவில் அதன் பங்கு மதிப்பு 3.33 சதவீதம் சரிந்து ரூ.99-க்கு வர்த்தகமானது.
ரூ.1,747 கோடி நிதி
கடன் பத்திரங்கள் விநியோகம் மூலம் ரூ.1,747 கோடி நிதி திரட்டி இருப்பதாக பேங்க் ஆஃப் பரோடா நேற்று தெரிவித்தது. பேஸல் III வகை பத்திரங்கள் விநியோகம் மூலம் இந்த நிதியைத் திரட்ட உள்ளது. கடந்த மாதமும் இதேவகையிலான பத்திரங்கள் விநியோகம் மூலம் பேங்க் ஆஃப் பரோடா ரூ.1,650 கோடி நிதி திரட்டியது குறிப்பிடத்தக்கது.