

குஜராத் அரசு சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தி உள்ள ‘சூர்யசக்தி கிசான் யோஜனா’ என்ற திட்டத்தினால் விவசாயிகள் இரட்டிப்பு வருமானம் ஈட்டுவதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு குஜராத் அரசு ரூ.900 கோடி மதிப்பீட்டில், ‘சூர்யசக்தி கிசான் யோஜனா’ என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தின்கீழ், விவசாயிகள் அவர்களது விளைநிலங்களில் சோலார் பேனல்களை அமைத்து, அதன் மூலம் உருவாகும் உபரி மின்சாரத்தை அரசுக்கு விற்பனை செய்ய முடியும். தவிர சோலார் பேனல்களை அமைப்பதற்கு அரசு 60 சதவீத அளவில் மானியமும் வழங்கும்.
இந்நிலையில், இதுபோன்ற சோலார் பேனல்கள் அமைத்த விவசாயிகள், விளைச்சலின் மூலம் கிடைக்கும் வருமானத்தைவிட, மின்சார உற்பத்தி மூலம் கூடுதல் வருமானம் ஈட்டுவதாக கூறுகின்றனர்.
இதுகுறித்து குஜராத் மாநில விவசாயி ஒருவர் கூறுகையில், ‘எங்களுக்குத் தேவையான நீரை இறைக்கவே இந்த சோலார் பேனல்களை பயன்படுத்துகிறோம். ஆனால் அதன் மூலம் உருவாகும் மின்சாரத்தால் எங்களுக்கு பணம் கிடைக்கிறது. அந்த வகையில் இந்த திட்டம் எங்களுக்கு லாபம் அளிக்கக் கூடியதாக உள்ளது’ என்று தெரிவித்தார்.
அரசு மற்றும் விநியோக நிறுவனங்கள் தலா ரூ.3.50 என்று விவசாயிகளிடமிருந்து வாங்கும் ஒரு யூனிட் மின்சாரத்துக்கு ரூ.7 வழங்கும். இது அறிமுகத் திட்டம் என்பதால் 7 ஆண்டுகளுக்கு மட்டுமேமின்சாரத்துக்கான தொகையை அரசு வழங்கும். அதன் பிறகு விநியோக நிறுவனங்கள் மட்டும் மின்சாரத்துக்கு தொகைவழங்கும்.